தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 14, 2006

சிறைப்பாசறையிலிருந்து ஒரு மடல்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:17 பிப
இறைவனின் திருப்பெயரால்
எம் சிறைவாசத்திற்கு கழகங்களே காரனம்
அபு ஸைஃபுத்தீன்
கோவை மத்திய சிறை12.04.2006
அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்….. இந்த மின்அஞ்சல் மூலம் பார்த்துக் கொண்டு இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு கோவை மத்திய சிறைப்பாசறையிலிருந்து அபூ ஸைஃபுத்தீன் வரையும் மடல். இன்று எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் புரிந்துவரும் எங்களுக்காக சமூக மக்களும், சமூகத்தின் பல்வேறு அமைப்புகளின் தரப்பிலிருந்தும் குரல்கள் எழுப்பபடுவதை காண்கின்றோம். எங்களின் நீண்டகால சட்டத்திற்கு புறம்பான சிறைவாசத்திற்கு அரசும், நீதித்துறையும் ஒரு புறம் காரணமாயிருக்கையில் இன்று எங்களுக்காக குரல் எழுப்பி வரும் அமைப்புகளும் காரணமாயிருந்துள்ளனர் என்ற கசப்பான வருத்தத்திற்குரிய உண்மையை சொல்லிவிடாமல் இருக்க இயலவில்லை. பழையதை மறப்போம். புதியதை வரவேற்போம் என்பது போல் இருந்துவிடலாம். ஆனால், இனி ஒரு முஸ்லிமும் எங்களைப் போல் அநாதைகளாய் தனிமைச் சிறையில் ஆண்டாண்டு காலம் பரிதவித்துவிடக் கூடாது என்பதற்காகவும், இனி இயக்கங்கள் இது போன்ற சமூக பிரச்சினையில் எப்படி நடந்திட வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதுகின்றேன். இன்று தமிழகத்தில் சில முஸ்லிம் அமைப்புகள் தேர்தல் களத்தில் நிற்கும் அரசியல் கட்சியாகவும், களத்தில் நிற்காத அரசியல் சார்ந்த அமைப்பாகவும், இயக்கங்களாகவும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காகவும், தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளுக்காகவும் பணியாற்றிக் கொண்டு இருக்கையில்; சமூகத்தில் இருந்து புறந்தள்ளப்பட்ட ஒரு பிரச்சினைக்காக ஒரு இளைஞர் கூட்டம் இயங்க ஆரம்பித்தது. இயல்பாகவே தாங்கள் ஒரு அமைப்பாக உருவாகிவருகின்றோம் என்று அறியாமல் உருவானார்கள். உருவாக்கப்பட்டார்கள். பொதுவாக சமூகத்தில் உள்ள இயக்கங்கள் திட்டம் அமைத்து. கட்டம் கட்டி, தீர்மானித்து பெயர் சூட்டி இயக்கம் ஆரம்பித்தப் பின்; சமூக பணி ஆற்றத் தொடங்குவார்கள். ஆனால் இவ்விளைஞர் கூட்டம் களம் கண்டு, போராடி, புழுதிபட்டு, சிறைபட்டு பின்னர் தங்கள் மீது தங்களை அறிந்தும் அறியாமலும் பின்னப்பட்ட பொறுப்பால் அமைப்பாய் உருமாறினார்கள். இவ்விளைஞர் கூட்டம் தாங்கள் மேற்கொள்ளும் பணியால் இயக்கம் வளருமா? வீழுமா? சிம்மாசனத்தை அடைவோமா? சிறைவாசத்தை கழிப்போமா? என்பது பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தாங்கள் எடுத்துக்கொண்ட சமூக மார்க்க பிரச்சினையை பிற அமைப்புகள் மேற்கொள்ளாததாலும், சட்டைசெய்யாமல் போனதாலும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வழிகாட்டல் இன்றி வெடித்துக் கிளம்பினார்கள். இன்று அதற்கு பரிசாய் ஒரு நீண்டகால சிறைவாசத்தில் தங்களையும், சுவரில்லா சூழ்நிலை சிறையில் தங்களை பிரிந்த குடும்பங்களையும் உட்படுத்தியுள்ளனர்.வடமாநிலங்களில் இந்துத்துவா கும்பல்கள் வேர்விட்டுக் கொண்டு இருக்கையில், திராவிட பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் இந்துத்துவாவின் நிழல் கூட படிந்திராத சூழலில், 1980களின் ஆரம்பத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ஒட்டி தோற்றம் பெற்ற ‘இந்து முன்னணி’ தனது பாசிச விஷத்தை தமிழகத்தில் பரப்பிடும் விதமாக, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்த முஸ்லிம்களின் மடிகளில் கைவத்தார்கள். தங்கள் உயிரினும் மேலாக முஸ்லிம்கள் மதிக்கும் நபிகள் நாயகத்தை தூற்றவும்; இஸ்லாமிய மாண்புகளை திட்டம் போட்டு சிதைக்கவும் தொடங்கினார்கள். தங்கள் உயிரையே தந்து தடுத்திட வேண்டிய ஒரு பிரச்சினையை சமூக இயக்கங்கள் பொருட்படுத்தாமல் போனார்கள். லீக்குகள் போன்ற அரசியல் அமைப்புகளும், அரசியல் சாரா இயக்கங்களும் இருந்த போதிலும் இப்பிரச்சினையை வீரியத்தோடும், விழிப்போடும் கைகொள்ளாமல் போனார்கள். விளைவு, இந்துத்துவாவின் பாசிச போக்குகள் அளவு கடந்து சென்றன. பூனைக்கு யார் மணி கட்டுவது? ஏப்படி கட்டுவது? என்றிருக்கையில் தான், விரல்விட்டு எண்ணக் கூடிய இளைஞர் கூட்டம் தங்கள் உணர்வுகளை கொட்ட வடிகால் இன்றி வெடித்துக் கிளம்பினார்கள். இருந்தும் முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து சிறு சலனம் கூட இல்லை. இவ்விளைஞர் கூட்டம் தங்கள் பணிகளில் யாரைப்பற்றியும் கவலை கொள்ளாமல் ஆரம்பகாலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சரியான இலக்கு நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில்தான்; இவ்விளைஞர் கூட்டமும், தமிழகமும் மட்டுமல்லாமல் இந்தியாவும் ஏன்? முழு உலகமே அதிர்ந்து போன, வரலாற்றுப் பக்கங்களில் இருப்பிடத்தை பிடித்துக்கொண்ட ”பாபர் மசூதி இடிப்பு’ இந்துத் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது. தமிழகத்தில் இஸ்லாமிய மாண்புகளை இந்துத்துவ தீவிரவாதிகள் இடித்துரைத்துக் கொண்டிருந்த போதும்; மௌன சாட்சிகளாய் இருந்த முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்புகளும்; 1992 டிசம்பர் 6 அன்று இஸ்லாமிய மாண்பினை பறைசாற்றும் வடிவமான இறையில்லத்தை சங்க்பரிவார் கும்பல்கள் இடித்துத் தரைமட்டமாக்கிய போதும் சரியான எதிர்ப்புகளை வெளிப்டுத்தாமல் முடங்கிக் போனார்கள். தேசம் கடந்த பிரச்சினைகளை எல்லாம் கையிலெடுத்து செயல்படும் இயக்கங்களும், இன்று தங்களுக்குள் ஏற்பட்ட இயக்கச் சண்டைகளில் வீதி இறங்கி தம் சகோதர இயக்கத்தை சேர்ந்த முஸ்லீமையே கைது செய்ய ஆண்களையும். பெண்களையும் வீதி இறக்கிய இயக்கங்களும், அன்று டிசம்பர் 6ல் அத்வானியையோ, உமாபாரதியையோ இன்னபிற இந்துத் தீவிரவாதிகளையோ கைது செய்யச் சொல்லி வீதி இறங்கவில்லை. விளைவு இதுவரை தங்கள் மாநில பிரச்சினையை மட்டுமே எதிர்நோக்கி வந்த இவ்விளைஞர் கூட்டம், உலக முஸ்லிம்களை எல்லாம் உசுப்பேற்றிவிட்ட இந்த துயர சம்பவத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திக்கு தெரியாமல், தமிழக இயக்கத் தலைமைகளின் சரியான வழிமுறை வழிகாட்டல்கள் காட்டப்படாததால் இவ்விளைஞர் கூட்டம் தங்களுக்கு தெரிந்த வகையிலான போராட்டத்தை கைகொண்டார்கள். அன்று (டிசம்பர் 6, 1992ல்) தமிழகத்தின் அனைத்து பகுதி முஸ்லிம்களும் உறங்கிக் கொண்டிருக்கையில், இவ்விளைஞர்; கூட்டம் மையம் கொண்டிருந்த கோவை கோட்டைமேட்டிலும், பாளை மேலப்பாளையத்திலும் காவல்துறையினரின் துப்பாக்கி சூடுகள் அரங்கேறின. இவ்வாறாக, பாபர் மசூதி இடிப்பிற்குப்பின் அடுத்தடுத்து பெரும் எதிர்ப்புகளை இவ்விளைஞர் கூட்டம் வெளிப்படுத்த ஆரம்பித்தனர். அதனால் காவல்துறை மற்றும் அரசின் அடக்கு முறைகளுக்கு ஆளாகி கொடிய தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதன் பின்னரே சட்டென பொறிதட்டியவர்களாக சுதாரித்துக் கொண்ட சில சமுதாய பெரியோர்கள், அறிஞர்கள் ஒன்று கூடி இது வரை நாம் தவற விட்ட ஒரு பிரச்சினையை கையிலெடுத்து களம் இறங்கிட வேண்டும் என்று 1995களில் ஒரு கழகத்தையும் ஆரம்பித்தார்கள் (இன்றைய நிலவரப்படி அக்கழகம் இரு வேறு கலகக் கூட்டமாய் எதிரெதிராய் நின்று கலகக்குரல் எழுப்பிக் கொண்டிருப்பது ஒரு தனிக்கதை)இன்னும் 1995களில் இக்கழகம் தடா என்ற கொடிய சட்டத்தில் சிறைப்பட்டுள்ள இளைஞர் கூட்டத்தை விடுதலை செய்ய நடத்திய போராட்டங்கள் தான் அக்கழகம் வளர ஒரு முக்கிய பங்களிப்பு செய்திருக்கின்றது என்ற நிதர்சன உண்மையை மறுக்கவோ, மறைக்கவோ முடியாததாகும். இப்படியானதொரு சூழலில் தான் கோவையில் 1997 நவம்பர், டிசம்பர் மாதத்தில் தமிழக முஸ்லிம்கள் கண்டிராத ஒரு இனப்படுகொலையை இந்துத்துவவாதிகளும், காவல்துறையினரும் கைகோர்த்து நடத்திக் காட்டினார்கள். எதிர்பாராத இந்நிகழ்வுகளால் முஸ்லிம்கள் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆளானார்கள். கோவையை உதாரணமாக சாட்டியே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் முஸ்லிம்களை அச்சுறுத்த ஆரம்பித்தனர்.இந்நிலையில் தான் முஸ்லிம்களின் படுகொலை நடந்துவிட்ட இரு மாதங்களுக்கு பிறகு இந்தியாவையே உலுக்கிய கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தேறியது. இக்குண்டு வெடிப்புகளுக்கு பின் காவல்துறை மற்றும் அரசின் கெடுபிடிகளாலும் கைது படலத்தாலும் கோவை முஸ்லிம்கள் அரண்டு போயினர். தமிழக முஸ்லிம்கள் இயக்கங்களும் நெருக்கடிகளை சந்தித்தன. இதனால் இக்குண்டு வெடிப்பை கண்டித்து பெரும் எதிர்ப்பு நிலைகளை இயக்கங்கள் கடைபிடிக்கத் தொடங்கின. இதன் மூலம் ஒவ்வொரு இயக்கமும் தன்னை இக்குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களிலிருந்து தூரப்படுத்திக் காட்டியது. இயக்கங்களின் இந்த ஆரம்ப போக்குதான் குண்டு வெடிப்பை காரணம் காட்டி சகட்டுமேனிக்கு தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம் கைதிகளை புறம் தள்ளிடவும்; இன்று இவ்வியக்கங்கள் குரல் கொடுத்து வரும் ‘நீண்டகால சிறைவாசம்’ என்ற ஒரு நிலைக்கு காரணமாய் போய்விட்டது. எந்த அளவிற்கு விரண்டோடிப் போனார்கள் என்பதற்கு நான் அறிந்த எனது பகுதியை சேர்ந்த ஒரு சம்பவமே போதும் என்று நினைக்கின்றேன்.1991 அல்லது 1992 என நினைக்கின்றேன். அப்பொழுது இஸ்லாத்தை தழுவிய ஒரு மாற்று மத சகோதரன் தன்னை நான்கு ஆங்கில சுருக்க எழுத்தை பெயராய் கொண்ட இயக்கத்திலும் இணைத்துக் கொண்டார். இஸ்லாத்தை தழுவியமைக்காக தமது வீட்டிலிருந்து வெறும் ஜட்டியுடன் அரை நிர்வாணமாக துரத்தியடிக்கப்பட்டார். இவரை இயக்கமும், மக்களும் அரவணைத்து ஆதரித்து தங்களில் ஒருவராய் சேர்த்துக் கொண்டனர். இதனால் மிகுந்த ஆர்வத்தோடும் பிடிப்போடும் இஸ்லாத்தை பின்பற்றி வந்தார். இச்சூழலில் தான் குண்டுவெடிப்பு காலத்தில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக சிறிய கலவர வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னர் நிகழ்ந்தது தான் கொடுமை. அக்கால வேளையில் காவல்துறை மற்றும் அரசின் நெருக்கடியில் இருந்து தங்களையும். இயக்கத்தையும் காத்துக் கொள்ள, முஸ்லிம் சமூகத்தினர் மீது காவல்துறையினரால் நடத்தப்பட்ட கைது படலத்தை கண்டும் கானாதது போல் மவுனமாய் போயினர். இச்சகோதரனை மீட்டெடுக்க அவரது நான்கு எழுத்து இயக்கமும், பிற இயக்கங்களும் முன்வராததால்; இவரது இந்து மதத்தை சேர்ந்த தாய் தமது மகனை மீட்டெடுக்க சிறைச்சாலை, நீதிமன்றம் என அலைந்து திரிந்து மீட்டெடுத்தார். விளைவு அன்று இஸ்லாத்தை தழுவ அரவணைப்பும் ஆதரவும் முஸ்விம் மக்களால் காட்டப்பட்டு கவரப்பட்டவர் பின்னர், தனக்கு ஏற்பட்ட இந்த அதீத சிறைவாசத்தை முஸ்லிம் இயக்கங்களும், மக்களும் கண்டுகொள்ளததால், தனக்கு ஆதரவளித்த தாயாரோடு முந்தைய (மதம்) வழிநோக்கி திரும்பிச் சென்றுவிட்டார். இப்படிப்பட்ட கவனிப்பாரற்ற நிலை இச்சகோதரனுக்கு மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி கண்ணை கட்டி காட்டில் விடப்பட்டது போல் சிறைவாசத்தை கழிக்க ஆரம்பித்தார்கள். இன்று அப்பாவிகளுக்கு விடுதலை என கோஷம் எழுப்பி, தீhமானம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று எட்டாண்டுகளுக்கு பிறகு எந்த அப்பாவிகளுக்காக குரல் கொடுக்கின்றார்களோ, அவர்கள் கைது செய்யப்பட்டபோதும் அப்பாவிகள் தானே? இடையில் ஒன்றும் அப்பாவிகளாய் மாறியவர்கள் இல்லையே? (அல்லது) அப்பாவிகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமெனில் அவர்கள் எட்டாண்டு கால சிறைவாசத்தை கழித்திருக்க வேண்டும் என்ற தகுதியை உங்கள் சமுதாய போராட்டத்தில் விதியாக வைத்துள்ளீர்களா? நாளை நீங்கள் கைது செய்யப்பட்டாலும் இப்படித்தான் குரல் கொடுக்கப்படுமா? சுhதாரண ஓரு கழகத் தொண்டன் ஒரு சாதாரண ஐ.பி.சி. வழக்கில் கைது செய்யபட்ட உடன் தலைமையில் இருந்து ஓடோடி கோவை வந்து போராட்டம் நடத்தாவிட்டாலும் அவர்களாகவே விட்டுவிடக்கூடிய அளவிற்கு பலவீனமான வழக்கிலேயே கழகத்தொண்டன் கைது செய்யப்பட்டான். ஆனால் ஆண்டாண்டு காலம் சிறைப்பட்டுள்ள மக்களுக்காக ஏன் இந்த தாமதப் போராட்டம். ‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்றால், அந்நீதிக்காக உங்களின் தாமதமான போராட்டத்தை எப்படி வர்ணிப்பது? இனி உங்கள் அப்பாவிகள் என்ற கோஷத்தையும் இனி மாற்றிக்கொள்ள கனிவுடன் வேண்டிக் கொள்கின்றேன். ஏனெனில், மறுக்கப்பட்ட நீதி என்பது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள விசாரணை தாமதமாகி வரும் அனைவருக்கும் பொருந்தும். மறுபுறம் இனப்படுகொலையை கோவையில் நடத்திக்காட்டிய இந்துத் தீவிரவாதிகளையும், இந்திய முழுதும் வன்முறையில் ஈடுபட்டு மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து வரும் இந்துத் தீவிரவாதிகளையும் அரசாங்கங்கள் சுதந்திரமாய் உலவ விட்டிருப்பதையும், பதில் நடவடிக்கையில் ஈடுபடுவோரை மட்டும் அரசாங்கங்கள் அடக்குமுறை செய்து தொடர்சிறையில் வைத்திருப்பதையும், சமூக பொறுப்புகளை, பிரச்சினைகளை இயக்கங்கள் கையில் எடுக்காமல், எதிர்கொள்ளாமல் தட்டிக் கழித்ததால் இவ்விளைஞர் கூட்டம் உருவானது என்பதையும் கருத்தில் கொண்டு அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளுக்காகவும் இயக்கங்கள் குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்றை சொல்லிக் கொள்கின்றேன். இவ்விளைஞர் கூட்டத்திற்கு குறிப்பிட்ட காலம் வரை திரைமறைவில் இருந்து இரண்டெழுத்து ஆங்கில இன்ஷியலில் அழைக்கப்படும் அறிஞர் ஆதரவும் வழிகாட்டுதலும் காட்டியதால் தங்கள் பணிகளுக்கு கிடைத்த மார்க்க அங்கீகாரம் என தங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்திட ஆரம்பித்தார்கள்.தற்போது வரை காரியம் இன்றும் கைகூடவில்லை. விடுதலைக்கான (வெளிச்சம்) வழிகள் தெரிந்தபாடில்லை. வெறும் ஒரு சிலர் விடுவிக்கப்பட்டு கண்துடைப்பும் நடந்து விடக்கூடாது. எப்படி இப்பிரச்சினையை நாம் எதிர்கொள்வது? நம் கோரிக்கைகளை எப்படி வென்றெடுப்பது? மிகச் சுலபம். இப்பிரச்சினை, கோரிக்கை மட்டுமல்ல சமூகத்தின் எப்பிரச்சினையையும் இதன் மூலம் அடைந்து விடலாம். அது உங்கள் கைகளில் தான் உள்ளது. ஆம்! அது தான் ஒற்றுமை என்ற வெறும் நான்கு எழுத்தில் உள்ள பலம். இப்பொழுது நீங்கள் ஆட்டமந்தையிலிருந்து சிதறிப் போய்விட்ட தனித்த ஆடுகளாய் இருக்கின்றீர்கள். உங்களை எதிரிகள் எளிதில் ஒடித்துப் போட்டு விடுவார்கள். எனவே, நீங்கள் சுள்ளி விறகாய் இருந்தாலும் ஒரே கட்டில் சங்கமமானால் நீங்கள் தான் அசைத்துக் பார்க்கக்கூட முடியாத பலம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆம்! சிறுபான்மையினராக நாம் இருந்தாலும், நாம் ஒரு சேர, ஒரே இடத்தில் இருந்து குரல்கள் எழுப்புவோமானால் அரசியல் களத்தில் நாம் ஏற்படுத்தும் அதிர்வுகளால் (அக்களத்தில்) தவிர்க்க முடியாத சக்தியாய் மாறிடுவோம்.எப்படி நாங்கள்உன்றிணைய முடியும்? எதை முன்வைத்து நாங்கள் ஒன்றிணைய முடியும்? இது சாத்தியமில்லை என்றெல்லாம் நீங்கள் நகம் கடித்து முணுமுணுப்பது புரிகிறது. இது ஒன்றும் பெரிய விஷயம் அல்லை. அதற்கு நீங்களே உதாரணம். உங்கள் கோஷங்களே அதற்கான பாலம். ஆம்! அதுதான் மக்கள் நலன்! சமூக நலன்! இதனை முன் வைத்தே இன்று கலிமா சொல்லாத இஸ்லாம் அல்லாத அரசியல் கட்சியோடு, அதுவும் சரசேவைக்கு ஆதரவளித்தவரோடு , ராமருக்கு இங்கு கோயில் கட்டாமல் வேறு எங்கு கோயில் எழுப்புவது என்று கேட்டவரோடு, 2002 கோத்ரா ரயில் விபத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கியவரோடு, மதமாற்ற தடைச்சட்டத்தை அமுல்படுத்தியவரோடு, போது சிவில் சட்டத்திற்கு ஆரதவளித்தவரோடு, மோடியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட மடிசார் மாமியாரோடு, இப்படி அடுக்கடுக்காய் அக்கிரமம் புரிந்த அரசியல் கட்சிகளோடு சமூகநலன் என்ற கோஷத்தை காட்டி ஒன்றிணையும் போது, அதே சமூக நலனை முன்வைத்து சகோதர இயக்கத்தவருடன் ஏன் ஒன்றிணைய முடியாது!?அதே எதிரணியிலும் இப்படித்தான் Nகுhவையில் முஸ்லிம்களை படுகொலை செய்ய காரணமாய் இருந்தவரோடு, குஜராத் பா.ஜ.க. அரசின் முஸ்லிம் இனப்படுகொலையின் போது, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாய் இருந்து, குஜராத் இனப்படுகொலையை நியாயப்படுத்தியவரோடு கூட்டு சேர நீங்கள் சமூகத்திடம் காரணம் காட்டுவது, மக்கள் நலன், சமூக நலன், கரசேவைக்கு ஆதரவளித்தவர்களோடு, காவிக்கும்பலின் இனப்படுகொலைக்கு ஆதரவாய் இருந்தவர்களோடு கைகுலுக்க தயாரான நீங்கள், கலிமா சொன்ன சகோதர இயக்கத்தினரோடு மக்கள், சமூக நலனை முன்வைத்து ஏன் கைகுலுக்;க தயாரில்லை!? என்ன? உங்கள் சமூக பற்று, மக்கள் நலன் கோஷம். இன்றும் இன்னும் நீங்கள் சமூக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. உங்களுக்கிடையே உள்ள ‘ஈகோ’வையும் சில்லறை பிரச்சினைகளையும் தூக்கி எறிந்துவிட்டு இருகலக குழுக்கள் போல் உள்ள நீங்கள் ஒரே கழகமாய் சமூக நலனை முன்வைத்து ஒன்றிணையுங்கள். உங்கள் ஒன்றிணைப்பால், அரசியலில் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள டுநயம (ஒழுகுதலை)ஐ சரி செய்யட்டும்.இனியும் ஆண்டாண்டு காலம் இப்படி அணிமாறி, அணிமாறி அரசியல் பிச்சைக்காரர்களாய் அலைந்து கொண்டிருப்பீர்களானால் எதிரும் புதிருமாய் இருந்து முஸ்லிம் சமூகத்தை அரசியல் களத்தில் பலவீனப்படுத்திவர்களானால் உங்கள் சமூகநலன் என்ற வே(கோ)ஷத்தை, முகத்திரையை சமூக மக்களே கிழித்தெறிவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ‘இன்னும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை கெட்டியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்.’ (ஆலு இம்ரான் :103)’அல்லாஹ்வின், அவனுடைய ரஸுலுக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் பிணங்கிக் கொள்ளாதீர்கள், நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள் – உங்களுடைய ஆற்றல் போய்விடும் – நீங்கள் பொறுமையாகவும் இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் (அன்ஃபால் : 46)உங்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் அனுப்பவேண்டிய
மெயில் விலாசம்
e.mail :
mdsafir2004@hotmail.com
Phone : 94436 54473 வஸ்ஸலாம் இவண்
இஸ்லாமிய சகோதரன்
அபு ஸைஃபுத்தீன்
கோவை மத்திய சிறை12.04.2006

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: