தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 10, 2007

ஜுனியர் விகடனுக்கு தமுமுக தலைவர் கண்டனம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 5:59 பிப

ஹோதா என்ன சாதாவா என்ற தலைப்பில் தமிழக முதல்வரின் தனிச் செயலாளர்களில் ஒருவரான முனீர் ஹோதா அவர்கள் மீது அவதூறு தெரிவித்து வெளியிட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பின்வரும் கடிதத்தை ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் பா. சீனிவாசன் அவர்களுக்கு 9.11.2007 அன்று அனுப்பியுள்ளார்கள்.

பெறுநர்

திரு. பா.சீனிவாசன் அவர்கள்
வெளியிட்டாளர்
ஜுனியர் விகடன்
34, கிரீம்ஸ் சாலை
சென்னை.

அன்புடையீர், நலம் பல சூழ்க…

ஜுனியர் விகடன் 11.11.2007 தேதியிட்ட இதழில் ‘ஹோதா என்ன சாதாவா’ என்ற தலைப்பில் தாங்கள் வெளியிட்ட கட்டுரையில் கடும் ஆட்சேபனைக்குரிய விஷமத்தனமானக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

முதல்வரின் முதன்மைச் செயலாளரான திரு.முனீர் ஹோதா இ.ஆ.ப., அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை வெளியிட்டிருக்கிறீர்கள்.

இதேபோல் முதல்வரின் மற்றொரு செயலாளரான பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. ராஜமாணிக்கம் இ.ஆ.ப., (ஒய்வு) அவர்களைப் பற்றியும் சில இதழ்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளைப் பொழிந்து எழுதி இருந்தீர்கள்.

ஆதாரங்களற்ற அவதூறுகளை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பு நோக்கில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதுதான் இதழியல் அறமா என்பதை தரம் வாய்ந்த பத்திரிகையின் பொறுப்பாளரான நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திரு. முனீர் ஹோதாவை, அவரது நிர்வாக முடிவுகளை முன்வைத்து, நீங்கள் விமர்சிக்க உரிமை உண்டு. அதேநேரம், முஸ்லிம் இனப்பற்றோடு செயல்படுகிறார் என்றும் முஸ்லிம் அதிகாரிகளை முக்கியப் பொறுப்பில் நியமிக்கிறார் என்றும் அவருடைய செயல்பாடுகளுக்கு மதச்சாயம் பூசுகின்ற அருவறுப்பான வேலையை நீங்கள் செய்யலாமா என்பதை யோசிக்க வேண்டுகிறோம்.

திரு. ஃபருக்கி (இ.ஆ.ப) அவர்களை தமிழக அரசின் தொழில்துறைச் செயலாளராக நியமித்தது தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு. இதில் முனீர் ஹோதாவுக்கு என்ன பங்கு இருக்கிறது? அப்படி இருந்தால், ஆதாரத்தோடு எழுதுங்கள். அதை விட்டுவிட்டு ‘இனப்பற்று’ என்ற தலைப்பில் அவதூறுகளை எழுதுவது முறையல்ல.

‘குழுமத்திலும் குதியாட்டம்’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ளவற்றில், ஜாஃபர் சேட், நஜ்முல் ஹோதா ஆகியோருக்கு பணி இடமாற்றம் செய்ததிலும், மதப்பற்று வெளிப்படுவதாக கொச்சைப்படுத்தி எழுதியுள்ளீர்கள். திரு. ஜாபர் சேட் (இ.கா.ப.) உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டது கடந்த மே மாதத்தில். அப்போது திரு. முனீர் ஹோதா நீண்ட கால விடுப்பில் இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிற மதத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, அதே மதத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் பணிமாற்றம் செய்தால் இப்படி எழுதுவீர்களா?

முதல்வரின் செயலாளர் பொறுப்புக்கு இணையான பொறுப்புதான் தொழில்துறைச் செயலாளர் பொறுப்பும். இவ்வாறிருக்க முனீர் ஹோதாவின் முயற்சியில் தான் ஃபருக்கி நியமிக்கப்பட்டார் என்பதும், ஃபருக்கியை இவர் தான் ஆட்டிப் படைக்கப் போகிறார் என்பதும் அபத்தமான அவதூறுகள் ஆகும்.

யார் யாரை எதில் நியமிக்க வேண்டும் என்பது தமிழக முதல்வருக்கு நன்கு தெரியும். இதில் முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு என்ன பங்கு இருக்கிறது?

பணிமாற்றம், பணி உயர்வு போன்றவை முதல்வரின் அனுமதிக்குப் போகாமல் நடக்க முடியுமா? முதல்வரின் செயலாளர்கள் தனி அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. முதல்வருக்கு உதவியாளர்களாக, ஆலோசகர்களாக மட்டுமே அவர்கள் செயல்பட முடியும். ஜு.வி. முதல்வரின் செயலாளர்களான முனீர் ஹோதா மற்றும் ராஜமாணிக்கம் மீது புழுதி வாரி இறைந்திருப்பது அது சில தீயசக்திகளின் தூண்டுதல்களுக்கு துணை போய் விட்டதோ என்று எண்ணத்தைத் தான் ஏற்படுத்தியுள்ளது.

உயர்பதவியில் இருப்பவர் முஸ்லிம் என்பதால், அவருக்கு மதச்சாயம் பூசி கொச்சைப் படுத்துவது, ஜு.வி போன்ற பத்திரிகைகளுக்கு தகுமான செயலா என்பதை நீங்கள் மனசாட்சியோடு யோசியுங்கள்.

‘கடல் எல்லை பாதுகாப்பு’ உள்நாட்டு உளவுத்துறை, பணம் கொட்டும் தொழில் துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்று எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களே நிர்வகிப்பது, யதார்த்தமாக நடந்த விஷய மாக யார்தான் ஒப்புக் கொள்வார்கள் என்று தாங்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது, நாம் படிப்பது. ஜு.வி.யா இல்லை, சங்பரிவாராப் பத்திரிகையின் தமிழ் பதிப்பா? என்ற சந்தேகம் எழுந்தது.

தமிழகத்தில் பணியாற்றும் 296 ஐ.ஏ.எஸ் அலுவலர்களில் 10 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இதே போல் 231 ஐ.பி.எஸ் அலுவலர்களில் 8 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம் அதிகாரி களில் தமது திறமை, அற்பணிப்பு களங்கமற்ற சேவை மூலம் முத்திரைப் பதித்த ஒரு சில முஸ்லிம் அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் வருவதை பொறுத்துக் கொள்ளாதவர்களுக்கு ஜு.வி. வக்காலத்து வாங்குவது நியாயமா? உங்கள் வரிகள் தேசப் பற்று மிகுந்த இந்த அதிகாரிகளை மட்டுமல்ல மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் தேசப்பற்றையும் கொச்சைப்படுத்தியுள்ளது.

இந்திய தேசத்தைக் கட்டியமைத்து, இந்த தேசம் அடிமைப்பட்டபோது, விடுதலைக் குப் போராடி மற்ற சமூகங்களையெல்லாம் விட மிக அதிக அளவில் உடல், பொருள், ஆவியை இந்நாட்டிற்காக அர்ப்பணித்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், முக்கியப் பதவிகளில் இருக்கக்கூடாதா? ஏனிந்த காழ்ப்புணர்வு? உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அறுதிப் பெருன்பான்மையாக இருப்பதை நீங்கள் கண்டித்து எழுதியதுண்டா?

முனீர் ஹோதா மீதான குற்றச்சாட்டுகளை முதல்வரே விசாரிக்க நினைத்தாலும் அரசுத்துறை அதிகாரிகள் மூலம் விசாரித்தால் பயனில்லை, நம்பிக்கையான தனியார் ஏஜென்ஸி மூலம் தான் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். நல்லவேளை, இந்து முன்னணி, பா.ஜ.க., அதிமுக போன்ற அமைப்புகள் மூலம் தான் முனீர் ஹோதாவை விசாரிக்க வேண்டும், என்று நீங்கள் எழுதவில்லை. இந்தப் பெருந்தன்மையை பாராட்டுகிறோம்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம். அதன் நேர்மையும், நம்பகத்தன்மையும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

உயரதிகாரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டிய மகத்தான பணி இதழ்களுக்குரியது. மதக் காழ்ப்புணர்வோடு எழுதுவது இதழியலையே இழுக்குப் படுத்துவதாக அமையும்.

முனீர் ஹோதா பற்றிய ஜு.வி.யின் காழ்ப்புணர்வு மிகுந்த கட்டுரையைக் கண்டிக்கிறோம்.

ஒரு தனிப்பட்ட அதிகாரியை தரக்குறைவாக எழுதும் முயற்சியில், ஒரு சமுதாயத்தையே தாங்கள் இழிவுபடுத்தியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

இக்கடிதத்தை நீங்கள் பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் எழுதவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அரசு அதிகாரிகளின் செயல்களுக்கு மதச் சாயம் பூசி அவர்களையும், அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் கொச்சைப்படுத்தும் மஞ்சள் ரக இதழியல் மாண்பை நீங்கள் கடைப்பிடிக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் தான் இதனை எழுதியுள்ளேன்.

(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

Advertisements

1 பின்னூட்டம் »

  1. Very good Reply to JV, Actually JV also act as yellow pages.

    பின்னூட்டம் by peermohamed — நவம்பர் 29, 2007 @ 11:10 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: