தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 18, 2007

ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன்(PART-01)

Filed under: குடந்தை சயீத், ஜகாத், ததஜ, பி.ஜே — முஸ்லிம் @ 8:49 பிப
ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-01)
குடந்தை சயீத் – தாயிஃப்-சவுதி அரேபியா
ஏக இறைவனின் திருப்பெயரால்…

இதன் இரன்டாம் பகுதி (PART-02) வாசிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

தமிழகத்தில் இஸ்லாம்

தமிழகத்தில் இஸ்லாம் இன்று எந்த நிலையில் இருக்கின்றது என்பதை விளக்குவதும், இதன் மூலம் சில விஷயங்களில் நாம் நம்மை, சீர்திருத்திக்கொள்ள வேண்டும் என்பதும் தான் இந்த தலைப்பை தமிழக முஸ்லீம்களின் முன் வைப்பதன் நோக்கம்.

(1) முதல் நிலை:

தமிழகத்தில் முஸ்லிம்களின் மத்தியில் மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்களும், அவலங்களும் பெருகி கிடந்த நேரம் இது. நிரந்தர நஷ;டத்தை தரக்கூடிய இணைவைப்புகள், பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருந்த காலம். இஸ்லாம் என்ற பெயரிலே யார் எதை சொன்னாலும் அதை நம்பி செயல் படுத்தி நஷ;டவாளிகளாக பெரும்பாலான முஸ்லிம்கள் வலம் வந்து கொண்டிருந்த நேரம் இது.

இந்த நிலையில் தான் எகத்துவமும், இஸ்லாம் அதன் தூய வடிவிலும் மக்களின் மத்தியில் எத்திவைக்கின்ற பணி ஆரம்பமாகின்றது. இந்த பிரச்சாரத்திற்கு பல எதிர்ப்புகள் பல வழிகளில் வந்தது. அவைகளை எல்லாம் சகித்துக் கொண்டு, அடி, உதைகளையும் வாங்கி, இரத்தம் சிந்தி உறுதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அல்லாஹ்வின் அருளால், அதன் விளைவுகளை இன்று கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது. இணைவைப்பில் சிக்கி கிடந்தவர்களும், பித்அத்தில் மூழ்கி இருந்தவர்களும் அதில் இருந்து விடுபட ஆரம்பித்துள்ளனர். ஏகத்துவத்தின் பக்கம் திரள ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் அதிக அளவில் குவிய ஆரம்பித்துள்ளனர். புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இப்படியான ஒரு எழுச்சியை மக்கள் மத்தியில் கொண்டு வர பல உலமாக்கள் காரணமாயிருந்தனர். அதிலும் குறிப்பாக மதிப்பிற்குறிய மௌலவி பி.ஜே. அவர்களின் பங்கும் செயல்பாடும் மிகவும் அதிகமானது.அல்ஹம்துலில்லாஹ்.

(2) இரண்டாவது நிலை:

தமிழகத்திலே இஸ்லாமிய ஏகத்துவத்தின் அடித்தளம் செம்மையாக அமைக்கப்பட்டு, முஸ்லீம்கள் அதன்பால் குவிய ஆரம்பித்துவிட்டனர். இந்த நேரத்திலேதான் ‘வெண்ணெய் திரளும் போது தாழி (பாணை) உடைந்த கதை’யாக சில நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வுகள் உலக முஸ்லீம்களையும்,அறிஞர்களையும், தமிழகத்தின் பக்கம் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்க்க வைத்துள்ளது.

ஏகத்துவம் என்ற கட்டிடத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. இனி
கட்டிடத்தை கட்டி பூர்த்தி செய்து அதன் பலனை முழுமையாக அடைவதுதான் பாக்கி என்றிருக்கும் நேரத்தில்தான், அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கின்ற சில நிகழ்வுகள் ஒரு புறம் நடக்க ஆரம்பிக்கின்றது.

அஸ்திவாரம் ஆட்டம் கானுவதின் விளக்கம்

இஸ்லாத்தின் அடிப்படை அஸ்திவாரத் தூண்களில் ஒன்றான ஜகாத் விஷயத்திலும்,இன்னும் சில விஷயங்களிலும், இதுவரை யாரும் சொல்லாத, பின்பற்றாத கருத்துக்களை, மதிப்பிற்குரிய மௌலவி பி.ஜே. அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அனைவருக்கும் மாற்றமான ஒரு கருத்தை பி.ஜே. அவர்கள் சொல்கின்றார்கள் என்ற கரணத்தினால் அது தவறு என்று நாம் கூறவில்லை. எந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு அவர் ஒரு கருத்தை சொல்கின்றாறோ அந்த ஆதாரம் தவறானதாக இருக்கின்றது. ஆதாரத்தின் அடிப்படையில்தான் முடிவை எடுக்கிறோம். ஆதாரம் தவறானதாக போய்விட்டால் அதன் அடிப்படையில் எடுத்த முடியும் தவறுதான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் பி.ஜே. அவர்களோ, ஆதாரம் தவறாக போனால் என்ன? நான் சொன்ன கருத்தை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கின்றார். தான் சொன்ன கருத்துக்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றதா? என்று தேடி, அப்படி ஏதும் இல்லாத காரணத்தினால் ‘இது தான் ஆதராம்’ என்று வேறு சில ஆதாரங்களை காட்ட முற்படுகிறார்.

அவர் சொல்லக்கூடிய கருத்துக்கு, அவைகள் ஆதாரமாக இல்லை. அவர் சொல்லிவிட்ட கருத்தை மாற்றிக்கொண்டிருக்க வேண்டியவர், நான் சொன்ன கருத்து சொன்னதுதான், என்பதிலே பிடிவாதமாக இருப்பதுடன் அதற்காக இல்லாத சான்றுகளை எல்லாம் இவைதாம் சான்றுகள் என்கிறார்.
இவை அனைத்தையும் ஆதாரங்களுடனும், நிரூபணங்களோடும் நாம் பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.

இதே போன்று வேறு சில விஷயங்களிலும், பி.ஜே. அவர்கள் மாறுபட்ட கருத்தை பிரச்சாரம் செய்கின்றார்கள். நாம் இங்கு அப்படிப்பட்ட விஷயங்களில் இரண்டை எடுத்துக் கொண்டுள்ளோம்.

(1) ஜகாத்
(2) குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்

இவைகளை நாம் எடுக்கக் காரணம், ஜகாத் இஸ்லாமிய அடிப்படையிலே ஒரு அம்சம். இதைப் போலவே நபி மொழியின் முக்கியத்துவத்தை நாம் விளக்கவேண்டியதில்லை.

மூன்றாம் நபராக முரண்பட்ட கருத்தை முடிவு செய்தல்

முரண்பட்ட இரண்டு கருத்துகளில் ஒன்று தவறு, ஒன்று சரியானது. முரண்பட்ட இரண்டு கருத்துக்கும், இருதரப்பில் இருந்தும் ஆதாரம் தரப்படுகின்றது.

நாம் இங்கு மூன்றாம் நபராக இருக்கின்றோம். ஏதோ ஒன்றை பின்பற்ற வேண்டும். இருதரப்பிலும் அவரவர்கள் தங்கள் கருத்துக்கான சான்றுகளை ஆய்வு செய்து சமர்ப்பித்து தான் பிரச்சாரம் செய்கின்றார்கள். இப்படி இருதரப்பின் உலமாக்களும் ஆய்வு செய்துள்ளனர்.

நாங்கள் ஆய்வு செய்துவிட்டோம், ஆகையால் நாங்கள் சொல்லும் கருத்தை
அப்படியே பின்பற்றுங்கள், என்று யாரும் கூறுவதில்லை. நாங்கள் ஆய்வு செய்து எங்களின் கருத்துக்கு இவைகளை சான்றுகளாக ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆகவே நாங்கள் சொல்லும் கருத்துக்கு இவைகள் தாம் சான்றுகள் என்று சான்றுகளை நம்முன் வைத்துதான் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

நாம் முன்பே குறிப்பிட்டது போல், ஏதோ ஒன்றை பின்பற்ற வேண்டும். உதாரணமாக நான் ஜகாத் கொடுக்கக்கூடியவனாக இருக்கின்றேன். ஜகாத் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதிலே கருத்து வேறுபாடு இருக்கின்ற காரணத்தினால், ஜகாத் கொடுப்பதையே நிறுத்திவிட முடியுமா? அப்படி நிறுத்தினால் அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாவோம்.

ஜகாத் கொடுக்க வேண்டும் அதுவும் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சொன்ன முறையில் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஜகாத் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. இங்கு ஜகாத் கொடுத்தும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

ஆகவே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு முக்கியமான கடமை, இந்த காலகட்டத்திலே இருக்கிறது. இருமாறுபட்ட கருத்துகளுக்கும் வைக்கக்கூடிய சான்றுகளை பார்த்து எது சரி? என்று முடிவெடுப்பது அவசியமாக இருக்கிறது. இதற்கு ஆலிம் பட்டம் வாங்கி இருக்க வேண்டாம், டாக்டரேட் பட்டம் வாங்கி இருக்க வேண்டாம். அரபி மொழி கூட தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமது தாய் மொழியிலும், நமக்கு ஓரளவு பரிச்சயமான ஆங்கில மொழியிலும், குர்ஆனும், நபி மொழியும் வெளிவந்திருக்கின்றன.

வேளை பளுவின் காரணமாகவும், இன்னும் பிற சூழ்நிலையின் காரணமாகவும், எல்லோரும் இவைகளை பார்க்க இயலாது என்பது நடைமுறையில் உண்மை. ஆனால் ஒரு விஷயம் தவறு என்று ஆதாரங்களின் அடிப்படையில் சுட்டிக் காட்டப்படும் போதும், நான் அதை பார்க்க மாட்டேன் என்று இருப்பது தவறு. அப்படி இருக்கும் போது தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாத அமல்களை நாம் செய்ய வழிவகுத்துவிடும். அல்லாஹ்விடம் தண்டனையை பெற்றுத்தரக்கூடிய செயலாக அது அமைந்துவிடும்.

நாமும் இரு மாறுபட்ட கருத்துக்களுக்குடைய ஆதாரங்களை பார்க்கக்கூடிய
மூன்றாம் நபராகத்தான் அவைகளை பார்த்தோம். அப்படி பார்க்க முற்பட்ட போது தான், முன்பே குறிப்பிட்டது போல பல தவறான சான்றுகளையும் விளக்கங்களையும் கண்டோம்.

பி.ஜே. சொன்ன கருத்துக்களிலே தவறுகள் இருக்கின்றது என்று சொல்ல இவன் பெரிய இஸ்லாமிய மார்க்க அறிஞனா? மார்க்க ஆராய்ச்சியாளனா? இவன் யார்? என்று யாரும் கேட்கவேண்டிய அவசியமில்லை. அப்படி கேட்க
நினைக்கின்றவர்களுக்கு தான் நாம் முன்கூட்டியே மேற்படி விளக்கங்களை
தந்துள்ளோம்.

ஒரு பக்கம் மட்டும் பார்த்தவர்கள்

பி.ஜே. யின் கருத்து ஏன் தவறாக இருக்கிறது? என்பதற்கு இவைகள் தான்
ஆதாரங்கள் என்று சுட்டிக் காட்டப்பட்ட போதும் பலர் அதை பார்க்கவும்
ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கவும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கான காரணங்களை அவர்களது பேச்சிலிருந்து அறிய முடிந்தது.

மாறுபட்ட கருத்துள்ள ஒரு விஷயத்தை, ஒரு பக்கம் மட்டும் கேட்டு அது சரி என்று ஒருவர் பின்பற்றினால், அவர் இஸ்லாத்தை பின்பற்றுகிறாரோ இல்லையோ, தனிப்பட்ட நபரை பின்பற்றுகிறார் என்பதற்கு அவரே சான்று, வேறு சான்றுகள் தேவையில்லை.

ஆகவே இதைப்படிக்கக் கூடியவர்கள் ஒரு பக்கம் மட்டும் பார்த்து கருத்து
வேறுபாடுள்ள ஒரு விஷயத்தை தீர்மானிப்பவர்களாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் கூறிய காரணங்களை அடுத்து பார்ப்போம் இன்ஷh அல்லாஹ்.

மறுபக்கம் பார்க்க மறுப்பவர்களின் நியாயப்படுத்துதல்

நாம் தவறுகளை நிரூபணங்களோடு சேர்த்துச் சொல்லி, ஆகையால் அந்த கருத்து தவறு என்கிறோம். அல்லாஹ்வும், தூதரும் அவ்வாறு சொல்லவில்லை என்கிறோம். மொட்டையாக பி.ஜே. சொல்வது தவறு என்று சொல்லவில்லை, எதிர்க்கவுமில்லை. அதே போலவே அவர் சொல்லும் எல்லா கருத்துகளையும் தவறு என்று சொல்லவோ, எதிர்க்கவோ இல்லை.

(1) தியாகம்:

அவர்களோ! ‘பலவருடங்களாக பி.ஜே. ஏகத்துவப் பிரச்சாரம் செய்கின்றார்.
அதற்காக அடி, உதை வாங்கி பல தியாகங்களை செய்துள்ளார்’ என்று
சுட்டிக்காட்டி அவர் செய்த தியாகங்கள் சம்பந்தமான ஸிடிகளை வாங்கிப்
பாருங்கள் என்று பதிலுக்கு நம்மிடம் சொல்கின்றனர். வேறு சிலர், அவர்
செய்த சின்னத் தவறுகளை எல்லாம் ஏன் பெரிது படுத்துகின்றீர்கள்?
என்கின்றனர்.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி இஸ்லாத்தை தாங்கி நிற்கும் தூண்களிலே
ஒரு தூண் ஜகாத் ஆக இருக்கின்றது. அதை போலவே நபிமொழியின் முக்கியத்துவமும் அணைவரும் அறிந்தது. இப்படிப்பட்ட இஸ்லாமிய அடிப்படை அம்சங்களிலே ஒரு தவறான கருத்து தவறான ஆதாரங்களோடும் விளக்கங்களோடும் பிரச்சாரம் செய்யப்படுவதை சின்ன விஷயம் என்று நினைப்பதே பெரிய தவறு.

அதைவிட முக்கியமான விஷயம், இவர்கள் இப்படிச் சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகின்றனர் என்பதை சிந்திக்க வேண்டும். நல்ல விஷயங்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலே சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இடையிடையே, குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாகவும், அதற்கு விளக்கமாக தங்களது சொந்த கருத்துகளையும் சொல்லலாம், தவறுகள் செய்யலாம், அவைகளை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை
என்கின்றனர். தவறுகளை சுட்டிக் காட்டினால், தனி நபரின் பெயருக்கு களங்கம் வரும் அதை நாங்கள் எதிர்ப்போம் என்கின்றனர்.

கட்டிடத்துக்கு அஸ்திவாரம் போட்டவர் அதை சேதப்படுத்தினால் பரவாயில்லை, அதனால் கட்டிடத்துக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடாது என்று அவர்கள் சொல்கின்றனர்.

அஸ்திவாரத்தை இடிக்க முற்படுபவர், அதைப் போட்டவராக இருந்தாலும்,
கட்டிடத்துக்கு பாதிப்பு உண்டாகும், கட்டிடமே தரைமட்டமாக ஆகிவிடும். இதை கட்டிடத்தின் உரிமையாளர்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது,
பார்த்துக் கொண்டு இருக்கவும் கூடாது, என்று நாம் சொல்கிறோம்.

(2) தனி நபர் முக்கியத்துவம்

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொன்ன (இஸ்லாத்)துக்கு ஒரு முஸ்லிம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? அல்லது அதற்கு மாற்றமாக ஒரு தனி நபர் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து (அவரது பெயருக்கு களங்கம் வரும் என்று) அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சொல்வதை நிராகரிக்கும் நிலைக்கு போக வேண்டுமா?

அல்லது அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாற்றமாக சொன்னாலும் பரவாயில்லை, தனி நபரின் பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்று அதைக் கண்டு கொள்ளாமல் தவறு என்று சொல்லாமல் ஒரு முஸ்லீம் இருக்க வேண்டுமா?

தவறை சுட்டிக்காட்டும் போது, அது உண்மையிலே தவறாக இருக்கும் பட்சத்தில் அதை அவர் ஏற்றுக்கொண்டு கருத்தை மாற்றிக் கொள்ளும் போது, அல்லாஹ் (ஸுப்) அவரது பெயருக்கு எந்த களங்கத்தையும் ஏற்படுத்த மாட்டான் இன்ஷh அல்லாஹ். தவறு என்று தெரிந்தவர்கள் அதை சுட்டிக்காட்டாமல் மௌனம் காத்தால் அவருக்கு அல்லாஹ்விடம் கேள்வி இருக்கின்றது. தவறை செய்தவர் ஏற்றுக்கொள்ளும் போது, அல்லாஹ்வுக்கு பயந்து அதை ஏற்றுக் கொண்டார் என்று அவர் மீதும், அவரது மார்க்கத் தீர்ப்புகளின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை கூடும்.

(3) பி.ஜே.யை எதிர்ப்பவர்கள் தான் தவறு
என்று சொல்கிறார்கள்:

இணை வைப்புக்கும், பித்அத்துக்கும் எதிராக பி.ஜே. பிரச்சாரம் செய்கின்ற
காரணத்தினால், இணை வைக்கக் கூடியவர்கள் தான் பி.ஜே.யை எதிர்க்கின்றனர். அவர்கள்தான் பி.ஜே.யின் கருத்து தவறு என்கின்றனர். ஆகவே பி.ஜே.யின் கருத்து தவறு என்று யார் சொன்னாலும் நாங்கள் அதை நம்ப மாட்டோம், அவர்கள் தரும் ஆதாரங்களை பார்க்க மாட்டோம் என்று கண்களை அவர்கள் மூடிக்கொள்கின்றனர்.

இணைவைப்புக்கும், பித்அத்துக்கும் எதிராக அவர் பிரச்சாரம் செய்வதை நாம்
எதிர்க்கவில்லை. அவரை எதிர்க்கக் கூடியவர்களாக இருப்பதினால், அவரது
கருத்து தவறு என்று கூறவில்லை.

அவரது கருத்து தவறானதாக இருப்பதினால் அவரை எதிர்க்கக் கூடியவர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

(4) பேச்சாற்றல் மற்றும் விவாதத்திறமை
மிக்கவர்

பேச்சாற்றலினால் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவர். கும்பகோணத்தில் பத்து இலட்சம் முஸ்லிம்கள், அவரது தலைமையிலே குவிந்தனர். படிக்காதவர்களுக்கும் புரியும் வண்ணம் பேசிக்கவரக் கூடியவர்.
விவாதத்திறமையில் அவரைப் போல் யாருமில்லை. அவரிடம் விவாதம் செய்ய, மற்றவர்கள் பயந்து ஒடுகிறார்கள். சொல்வது உண்மையாக இருந்தால் அவரோடு விவாதம் செய்து உண்மையை நிரூபிக்கட்டும். ஆகவே அவர் கூறுவது தான் சரியான கருத்து என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

பேச்சாற்றல், விவாதத் திறமை என்பதெல்லாம் அல்லாஹ் (ஸுப்) அருளிய ஒரு அருட்கொடை. பேச்சாற்றல் உள்ளவர்கள் சொல்வது எல்லாம் சரியான கருத்து, மற்றவர்கள் சொல்வது தவறான கருத்து என்று சொல்வார்களேயானால், அதை ஒரு அளவு கோலாக எடுப்பார்களேயானால், இவரைவிட பேச்சாற்றல்மிக்கவர்கள் இஸ்லாத்துக்கு வெளியே கூட இருக்கின்றார்கள், என்று நாம் சொல்கின்றோம். அது மட்டுமல்ல பேச்சாற்றலாலும் விவாதத்திறமையினாலும் தவறான கருத்தைக்கூட சரியான கருத்து என்பது போல காட்ட இயலும் என்று நாம் சொல்கிறோம்.

பி.ஜே. அவர்கள் தவறான கருத்தை, சரியானது போல் காட்ட, விவாதத் திறமையை பயன்படுத்தியுள்ளார் என்பதற்கான ஆதாரமும் பின்னால் தரப்பட்டுள்ளது.

(5) த.நா.த. ஜமாத் இயக்கத்தை அழிக்க திட்டம்

த.நா.த. ஜமாத் என்ற இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமையினால் அந்த இயக்கத்தை நசுக்க பழைய சகாக்கள் (த.மு.மு.க) மற்றும் வேறுபல இயக்கங்களும் போடும் திட்டம் தான் இது. ஆகவே அவரது கருத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம், மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள், அதனால் இதனை கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.

த.நா.த. ஜமாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமையினால் அதை அழிக்க நாம், பி.ஜே.யின் கருத்து தவறு என்று சொல்லவில்லை. எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொல்லாததை சட்டமாக்க நினைத்தால், அது நமக்கு ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்தால் அதை நாம் எதிர்ப்போம், ஒவ்வொரு முஸ்லிமின் கடமை அது என்று நாம் சொல்கிறோம்.

(6) பி.ஜே.யின் ஆய்வில் தவறு வராது

மார்க்கத்தை அடி வரை சென்று ஆய்வு செய்யக்கூடியவர். அலசி ஆராய்ந்து தான் முடிவெடுப்பார். ஆகவே அவரது ஆய்வும் மார்க்கத் தீர்ப்பும் சரியாகத் தான் இருக்கும் அதில் தவறு வராது என்று அவர்கள் சொல்கின்றனர்.
தனிப்பட்ட ஒரு நபர் கூறுவதுதான் இஸ்லாம் என்று ஏற்க வேண்டும் என்றால், அது அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் அப்படி ஏற்க முடியும் என்று நாம் கூறுகின்றோம். மற்ற மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கக் கூடியவர்களே! என்று நாம் சொல்கின்றோம்.

இஸ்லாத்தின் அளவுகோல்

மேற்கண்ட காரணங்கள் தான் பி.ஜே.யின் கருத்து சரி என்பதற்கு ஆதாரங்களா? இஸ்லாதுக்கு இவைகள் தான் அளவு கோலா?

இவைகள் தாம் ஆதாரங்கள் என்று அவர்கள் கூறுவார்களேயானால், அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றவில்லை தனிநபரை பின்பற்றுகின்றார்கள் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை அவர்களே சாட்சியாக இருக்கின்றார்கள்.

இவைகள் ஆதாரம் இல்லை என்று சொல்வார்களேயானால் சொன்னதோடு நிற்காமல் பி.ஜே. அவர்கள் தரக்கூடிய ஆதாரங்கள் சரியா? தவறா? என்று பார்க்க வேண்டும். நாம் அதை செய்யும் பொழுதுதான் தவறு என்று கண்டுகொண்டோம். அதைத் தான் இனி பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.

தவறு என்பது தெரிய வந்தால், அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து அதை
சம்மந்தப்பட்டவர்களிடமும், பின்பற்றுபவர்களிடமும் இந்த விஷயம் தவறாக
இருக்கின்றது என்பதை எத்தி வைக்க வேண்டும். தவறான கருத்தை சொன்னவர் யார்?

அவரின் செல்வாக்கு என்ன? அவரைப்பின்பற்ற கோடிக்கனக்கானவர்கள்
இருக்கின்றார்கள் நாம் சொல்வது எடுபடாது என்று எல்லாம் பார்த்து, வாய்
மூடி மௌனம் காப்பார்களேயானால் அவர்கள் அல்லாஹ்வுக்கு பயப்படவில்லை. ஒரு பெரும் கூட்டத்துக்காக பயந்து அல்லாஹ்வை சந்திப்பதை மறந்து இருக்கின்றார்கள். அந்தக் கருத்துக்கள் சரி என்று ஏற்றுக்கொண்டால் அது அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் உள்ள விஷயம்.

இரு சாராருமே முஸ்லிம்களாக இருக்கின்றோம். மறுமையிலே அல்லாஹ்வின் சந்நிதானத்தில் இந்த வழக்கு வரும் போது, அங்கும் இதே காரணங்களையும், ஆதாரங்களையும் வைப்போம். அல்லாஹ் (ஸுப்) நியாயமான தீர்ப்பைத்தவிர வேறு எதையும் வழங்காதவன். இதை நாம் இரு சாராரும் நினைவுபடுத்திக் கொள்வோமாக!

குர்ஆன் வசனத்தையே………..!

ஜகாத் விஷயத்திலே கடைசியாக நடந்த ஒரு சம்பவத்தை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டிவிட்டு அதன் பின்பு ஜகாத் விஷயத்தை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மதுரையிலே கடந்த 10ஃ02ஃ2007 அன்று ஆரம்பித்து இரண்டு நாட்கள் பி.ஜே.
அவர்களுக்கும், நூர் முஹம்மது அவர்களுக்கும் விவாதம் நடந்தது.

திருக்குர்ஆனின் 6:141 வது வசனம் பி.ஜே.யின் சில விளக்கங்களுக்கு எதிராக இருக்கின்றது. அதனால் பி.ஜே. அந்த வசனம் விளைபொருட்களின் ஜகாத்தை
குறிக்காது என்று சொல்லி வேறு விளக்கம் கொடுக்கிறாரர்.

அந்த வசனத்துக்கு சரியான விளக்கம் எது என்று தெரிந்து கொண்டே, தான் சொல்ல வருகின்ற ஒரு கருத்துக்கு அது எதிராக இருக்கின்ற காரணத்தினால், அல்லாஹ் (சுப்) சொன்னதையே, அவன் அப்படிச் சொல்லவில்லை என்கின்றார். அதாவது அல்லாஹ் (சுப்) சொன்னதை மறுக்கின்றார்.

ஆதாரங்கள்:

(1) அவரது தர்ஜுமா குர்ஆனிலே 6:141 இன் மொழி பெயர்ப்பை பார்க்கவும்.

(2) 6:141 வசனம் விளை பொருட்களின் ஜகாத்தைக் குறிக்கிறது என்று அவரின் அதிகபடியான விளக்கம். பி.ஜே.யின் தர்ஜுமா குர்ஆன் மூன்றாம் பதிப்பு (3 வது பதிப்பு) பக்கம் 1288.

(3) 6:141 வசனம் விளைபொருட்களை அறுவடை செய்யும் நாளில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. ஏகத்துவம் பத்திரிக்கை ஜனவரி 2007 பக்கம் 5.

(4) விளைபொருட்களின் அறுவடை தினத்தன்றே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பி.ஜே. பேசியது. தலைப்பு: சர்ச்சைக்குரிய சட்டங்கள், பாகம் 4, (நேரம்
9வது நிமிடம் முதல் 10வது நிமிடம் வரை)

(5) பேரீச்சம் பழங்கள் அறுவடை செய்யப்பட்ட உடனே ஜகாத்துக்காக
கொண்டுவரப்படுவது வழக்கமாக இருந்தது. புகாரி 1485 அல்லாஹ் (ஸுப்) நேரடியாக சொன்னதையே அவன் அப்படிச் சொல்லவில்லை என்று தனது
விளக்கத்தைக் கொடுத்து மறுக்கும் போது நபி மொழிகளின் நிலை என்ன?

ஜகாத்

உலகமே ஒருமித்து ஏற்றுக் கொண்டிருக்கின்ற கருத்துக்கு மாற்றமாக ஒரு புதிய கருத்தை ஜகாத் விஷயத்திலே பிரச்சாரம் செய்கின்றார் மதிப்பிற்குறிய மௌலவி பி.ஜே. அவர்கள்.

உலகமே பின்பற்றினாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நான் சொல்கின்ற இந்த புதிய கருத்துக்குத் தான் ஆதாரம் இருக்கின்றது என்று சொல்கின்றார்.

அவரது கருத்து

ஜகாத் ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான். பொருள் வந்தவுடன் அதைக் கொடுத்துவிட வேண்டும். ஆதாரம் (புகாரி – 1404)

அல்லாஹ்வின் தூதர் ‘பொருள்களுக்கு தூய்மையாக’ அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கி இருக்கின்றான், ‘துஹ்ரதன் லில் அம்வால்’ என்று சொல்லி இருக்கின்றார்கள்.

இவரது விளக்கம்

பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் என்றால், கொடுத்த பொருள் தூய்மையாகி விட்டது. அதைத் திரும்ப தூய்மைப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக பொருள் வந்தால் அதை தூய்மைப் படுத்துவதற்காக ஜகாத் கொடுக்க வேண்டும். கொடுப்பதற்கு கால இடைவெளி, ஒரு வருடம் என்றோ, ஆறு மாதம் என்றோ ஏதுமில்லை. பொருள் வந்தவுடன் ஜகாத் கொடுத்துவிட வேண்டும். இப்படியாக பொருள் வர வர கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பல விளக்கங்களை பி.ஜே. கொடுக்கின்றார்.

விளக்கங்களில் முரன்பாடு

மேற்கண்ட ஆதாரத்தை முன்வைத்து விட்டு இவர் பல விளக்கங்களைத் தருகின்றார். அந்த விளக்கங்களிலும், உதாரணங்களிலும் பல முரண்பாடுகள் மலிந்து கிடந்தன.

பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் என்று தானே அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக ஆதாரம் காட்டுகிறார், அதிலே கொடுத்த பொருள்களுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டாம் என்றும், புதிது புதிதாய் வரும் பொருள்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்றும், வந்தவுடனே கொடுத்துவிட வேண்டும் என்றும் ஆதாரம் ஏதுமில்லையே! பொருள்களின் தூய்மை என்றால் என்ன? பொருள்களின் அழுக்கு என்றால் என்ன? தூய்மைப்படுத்தப்பட்ட பொருள் திரும்பவும் அழுக்காகாதா? போன்ற இன்னும் பல சந்தேகங்களும் கேள்விகளும் வந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் கூறியதை எடுத்துப் பார்த்தால் கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம் என்று அந்த ‘நபி மொழி’ எடுத்துப் பார்க்கப்பட்டது.

ஆச்சரியம், ஆனால் உண்மை!

புஹாரியின் 1404 வது நம்பரை எடுத்துப் பார்த்தால், அது அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அங்கு பதிவு செய்யப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் என்று எதை பி.ஜே. அவர்கள் குறிப்பிட்டார்களோ, அது அல்லாஹ்வின் தூதர் சொன்னது இல்லை.

நபித் தோழர் ஒருவர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது கருத்தாக கூறியது தான் அது. இதை யார் வேண்டுமானாலும் புஹாரியின் 1404வது நம்பரை எடுத்துப் பார்க்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் சொல்லாததை வைத்து சட்டம்

அல்லாஹ்வின் தூதர் கூறாததை வைத்து தான் ஜகாத் விஷயத்தில் ஒரு புதிய கருத்தை, உலகிற்கு மாற்றமாக பி.ஜே. சொல்கிறார். இது அவருக்கு தெரிய வந்ததும் அதை தவறுதலாக சொல்லிவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார், ஏகத்துவத்தில் எழுதியும் உள்ளார்கள்.

ஆதாரம் தவறு என்றால், அதன் அடிப்படையில் எடுத்த முடிவு?

நடை முறையிலே பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் ஆதாரத்தின் அடிப்படையிலேதான் முடிவெடுக்கிறோம். இது மார்க்க விஷயம். ஆதாரத்தின் அடிப்படையிலேதான் முடிவெடுக்க வேண்டும், என்பதுதான் ஆய்வின் இலக்கணம். தவறான சான்றுகளின் அடிப்படையில் எடுத்த முடிவும் தவறானதாகத்தான் இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதற்கு மார்க்கம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. சான்று தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத்’ என்ற முடிவும் தவறு.

ஆய்வு செய்தவர் என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆய்வை செய்த பி.ஜே. அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?. ஒரு பொருளுக்கு ஒரு தடைவ தான் ஜகாத் என்ற கருத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டுமா? இல்லையா?

சொன்னால் சொன்னதுதான்

கருத்து நாங்கள் சொன்னால் அதை மாற்றிக்கொள்ளமாட்டோம். ஆதாரம் தவறாக போய்விட்டால் அதற்கு வேறு ஆதாரம் தயார் செய்வோம், ஆனால் சொன்ன கருத்து சொன்னதுதான், என்று வேறு ஆதாரங்களைக் கொடுத்து, இதுதான் முக்கியமான ஆதாரம் என்கின்றார். பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் என்பது எல்லாம் முக்கியமான ஆதாரம் இல்லை. இது தவறான ஆதாரமாகப் போனாலும், நாங்கள் சொன்ன கருத்துக்கு எந்த பாதிப்புமில்லை என்கின்றார். ஏகத்துவம் செப்டம்பர் 2005, பக்கம் 9 மற்றும் 48. ஜனவரி 2006, பக்கம் 43.

பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் என்ற ஆதாரத்தை வைத்துதான் அந்த முடிவை எடுத்தார் என்பதை ஜகாத் ஒரு ஆய்வு என்ற சீடியை பார்க்கும் யாரும் புரிந்து கொள்ளலாம்.

பிடிவாதத்தை காட்டுகிறது

சான்றுகளின் அடிப்படையில் முடிவெடுக்காமல், தான் எடுத்த முடிவுக்கு
தகுந்த மாதிரி தவறான சான்றுகளை உண்டாக்க கூடிய பிடிவாதக்காரர் என்பதைத் தான் அவரது செயல்பாடுகள் உணர்த்துகிறது.

தவறான ஆதாரம்

ஆதாரம் தவறானதும், அதை ஆதாரமாக வைத்து நான் அந்த முடிவெடுக்கவில்லை என்று பின்வாங்கி வேறு ஒரு ஆதாரத்தை உண்டாக்க முற்படுகிறார். அவரின் இந்த கூற்றுப்படி வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வருகின்ற நபி மொழி எல்லாம் பலகீனமாக இருக்கின்றன. ஆகையால் ஜகாத் கொடுப்பதற்கு காலக்கெடு ஏதுமில்லை. கொடு என்று மட்டும் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் இதை வைத்து ஒரு தடவை கொடுத்தால் போதும் என்று முடிவெடுத்தேன் என்று சொல்கிறார். ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு இது தான் முக்கிய ஆதாரமாம். ஏகத்துவம் – 2005 செப்டம்பர், பக்கம்: 5. ஏகத்துவம் – 2006 ஜனவரி, பக்கம்: 40.

அவரின் இந்தக் கூற்றுப்படி வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஒரு பலமான நபி மொழி இருந்தால், கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அப்படி ஏதும் இல்லாத காரணத்தினால் தான், கொடு என்ற பொதுவான கட்டளை ஒரு தடவை கொடுப்பதைத் தான் குறிக்கும் என்ற அப்படிடையில், ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்ற முடிவை எடுத்தாராம்.

வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்ற
நபி மொழியை ஏற்றுக்கொண்டிருந்த போது………!

பி.ஜே. கூறுகின்ற காரணம் தவறானது. இதை சாதரணமாக சிந்திக்கின்ற யாரும் அறிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய ஹதீஸ் கலை ஞானமோ, மார்க்க அறிவோ கூடத் தேவையில்லை. அரபு மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அண்ணன் பி.ஜே. அவர்கள், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நபி மொழி பலமானதாக இருக்கிறது என்று ஒரு நேரத்தில் ஏற்றுக்
கொண்டிருந்தார்.

அப்படி ஏற்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஜகாத் கொடுத்த பொருளுக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும். கொடுத்த பொருளுக்கு திரும்ப தேவையில்லை என்று சொல்லி இருக்க கூடாது. ஏனென்றால், நபி மொழி அப்படி இல்லாததால்தான், ‘ஒரு தடவை’ என்ற முடிவை எடுத்ததாக சொல்கின்றார்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற காலக்கெடு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டும், கொடுத்த பொருளுக்கு ஜகாத் தேவையில்லை என்றுதான் சொல்கின்றார். இதுவும் ஜகாத் ஒரு ஆய்வு என்ற சிடியில் கானக்கூடியதாக இருக்கிறது.

அப்படியானால், காலக்கெடு இல்லாததால், ‘கொடு’ என்றால் ஒரு தடவை கொடுத்தால் போதும் என்ற முடிவெடுத்தேன், என்று அவர் தற்சமயம் சொல்லுவது, தவறு என்பது அவரது வாயிலிருந்தே நிரூபிக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் நிரூபனம்

முதலில் அல்லாஹ்வின் தூதர் சொல்லாததை வைத்து அவர்கள் சொன்னார்கள் என்று சொல்லி ஒரு முடிவெடுத்தார். அந்தத் தவறு சுட்டிக்காட்டப்பட்ட போது, அதை முக்கியமான ஆதாரமாக வைத்து அந்த முடிவை எடுக்கவில்லை என்றார். அது தவறாகப் போனாலும் ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்பதற்கு வேறு முக்கிய ஆதாரம் இருக்கிறது என்றார். வேறு ஆதாரம் தான் முக்கிய ஆதாரம் என்று அவர் வைத்ததை, அலசி, அதுவும் தவறு என்று இரண்டாவது முறையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் என்பதற்கு ஆ…தா…ர…ம்…!

அப்படியானால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பதற்கு என்ன ஆதாரம்? ஒரு ஆதாரமுமில்லை. மௌலவி பி.ஜே. அவர்களிடம் இருந்து வந்திருக்கிறது இந்த முடிவு என்பது தான் ஆதாரம். அவரிடம் இருந்து வருவது தான் மார்க்கம் என்று ஒருவர் நினைத்தால், பி.ஜே. அவர்களின் நிலையை எங்கு உயர்த்தி வைத்துள்ளார்கள் என்ற விபரீதம் புரியும். அப்படியெல்லாம் இல்லை என்று மறுப்பார்களேயானால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவரும் மனிதர் தான், அவரிடமும் தவறுகள் வரும். இந்த விஷயத்தில் அவரது கருத்து தவறானது தான் என்று அதை ஒதுக்கிவிட வேண்டும்.

ஆதாரம் கேட்பவராக மாறிய பி.ஜே.

ஆதாரத்தின் அடிப்படையில் தான் எதையும் பின்பற்ற வேண்டும், என்றெல்லாம் பல மேடைகளில் பிரச்சாரம் செய்தவர், செய்து கொண்டிருப்பவர், மதிப்பிற்குறிய மௌலவி சகோதரர் பி.ஜே. அவர்கள்.

ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவெடுத்து அவரது கருத்துக்களை அதில் திணித்து பிரச்சாரம் செய்த காரணத்தினால், அண்ணன் பி.ஜே. அவர்கள், அவர் சொல்லும் கருத்துக்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியாமல் ‘நான் ஜகாத் விஷயத்திலே ஆதாரம் கேட்பவனாக மட்டும் இருக்கிறேன், வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பவர்கள்தான் ஆதாரம் தர வேண்டும்’ என்று Open ஆக Declare செய்கின்றார். மதுரையில் நடந்த விவாதத்தில் இப்படிக் கூறுகின்றார்.

இதைக் கேட்பவர்கள் யாருமே, அவர் ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்று முடிவெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். அதைக் கேட்ட பின்பும் அவர் சொல்வது சரி தான் என்று சொல்பவர்கள் கீழ் கண்ட விளக்கத்தை சிந்திக்கவும்.

ஆதாரம் கேட்பவரானதற்கு அவர் கூறும் காரணம்

ஜகாத் விஷயத்திலே ஆதாரம் எதையும் கொடுக்க வேண்டிய தேவையில்லையாம். மாற்றுக் கருத்துடையவர்கள் வைக்கும் ஆதாரங்களை இவர் சரியில்லை என்று சொல்லிவிட்டால், அவர்களிடம் ஆதாரம் இல்லை என்று அர்த்தமாம். அவர்களிடம் ஆதாரமில்லை என்று பி.ஜே. சொல்லிவிட்டால், இவரின் கருத்து சரி என்று ஆகிவிடுமாம். இவைகளை பி.ஜே. மதுரை விவாதத்திலே சொல்கின்றார். ஏகத்துவத்திலும் எழுதி இருக்கின்றார்கள். இதையும் சரி என்று நம்புகின்றவர்கள் இலட்சக்கனக்கானோர் இன்று தழிழகத்தில் இருக்கின்றனர்.

ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பதற்குத்தான் ஆதாரம் தரவேண்டும். செய்ய வேண்டாம் என்பதற்கு ஆதாரம் தரவேண்டாம், ஆதாரம் கேட்க வேண்டும். இது தான் அவரது கான்செப்ட் . இதைக் கொண்டு வந்து ஜகாத் விஷயத்தில் இணைக்கிறார். இங்குதான் நாம் நமது கவனத்தை செலுத்த வேண்டும்.

இன்சா அல்லாஹ்…நாளை தொடரும்….

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: