தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 21, 2008

மாமா வேலை பார்க்காததால் காவல்துறை என்னை கொல்ல பார்க்கின்றது – தவ்ஃபீக்

Filed under: அதிரை, இறைவன் ஒருவனே, தவ்ஃபீக் — முஸ்லிம் @ 7:56 பிப

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஸ்கர் – இ – தொய்பா வலுவாக கால் ஊன்ற ஆரம்பித்துவிட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாசகார வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் `இறைவன் ஒருவனே’ என்ற அமைப்பு பின்புலமாகச் செயல்படுகிறது. இந்து மதத் தலைவர்களைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்… என்ற ரீதியில் வெளியாகும் தகவல்களும், சென்னையில் பிடிபட்ட மூன்று தீவிரவாதி களிடம் பெறப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வாக்குமூலங்களும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின், சென்னை மண்ணடி, கொடுங்கையூர் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பழனி உமர், மேலப்பாளையம் சையது காசிம், மண்ணடி காதர் ஆகியோர் பிடிபட்டனர். இதுபற்றிய தகவல்களை வெளியிட்ட போலீஸார், “தேடுதலில் பிடிபட்டவர்கள் `இறைவன் ஒருவனே’ அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதன் தலைவர் தவ்ஃபீக், அபுதாகீர் ஆகியோர் தப்பியோடிவிட்டனர். ரியாத்துக்கு வேலை தேடிச் சென்றபோதுதான் தவ்ஃபீக்குக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு லஸ்கர் – இ – தொய்பா அமைப்பில் ஆயுதப் பயிற்சியை எடுத்துக் கொண்டார். ஆந்திராவில் லஸ்கர் – இ – தொய்பா மாநிலத் தலைவர் அப்துல் அஜீஸுடன் சேர்ந்து செயல்பட்டார். ஒரு சண்டையில் அஜீஸ் சுட்டுக் கொல்லப்பட்டதும், சென்னைக்கு வந்து தீவிரவாத வேலைகளைத் தொடங்கினார் தவ்ஃபீக். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் `இறைவன் ஒருவனே’ என்ற அமைப்பிற்கு முக்கியத் தொடர்பிருக்கிறது. தவ்ஃபீக்கைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.

தவ்ஃபீக்கின் மனைவி மர்லியாவும், கடந்த 17-ம் தேதி தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஃபேக்ஸ் ஒன்றில் `என் கணவர் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக உழைத்து வருகிறார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் அவரைப் பற்றி அவதூறாக பத்திரிகைகளில் செய்தி பரப்புகின்றனர். அவர் பிடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டால் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக இப்படியெல்லாம் செய்கின்றனர். என் கணவர் எந்தவித தீவிரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை. அரசுதான் கருணையோடு அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

தவ்ஃபீக்கின் வக்கீல்களிடம் பேசிய போலீஸாரும், `ஜமாத் ஆட்களின் உதவியோடு அவரைக் கூட்டி வாருங்கள். என்கவுன்ட்டர் பயம் தேவை யில்லை’ என்று கூறியுள்ளனர். நாமும் தவ்ஃபீக்கைச் சந்திக்க அவரது வக்கீல்கள் மூலம் தொடர்ந்து முயற்சி செய்தோம். நமது தேடுதலை அறிந்து கொண்ட தவ்ஃபீக் நமது செல்போன் எண்ணுக்கே லைனில் வந்தார்.

“வணக்கம். என் பேர் தவ்ஃபீக். இந்தப் பேரைச் சொல்வது என்பது புரியாத அரபு பாஷையைச் சொல்வதுபோல்தான். அதனால் `இறையுதவி’ என பெயரை மாற்றிக் கொண்டேன். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட் டினம்தான் எனக்குச் சொந்த ஊர். மர்லியா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். சிறு வயது முதலே இஸ்லாத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். மற்ற இஸ்லாமிய அமைப்பு களைக் காட்டிலும் தமிழ் மரபு சார்ந்த விஷயங்களைப் பற்றி நான் பேசும் முறைகள் மார்க்க பெரியவர்கள் பலருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. என் வாழ்நாளில் சிறுபான்மையினர் நலனுக்காகப் பாடுபட்டு வருகிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு நான்காயிரம் ஓட்டுக்களை வாங்கினேன்.

ஆரம்பகாலத்தில் அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். அப்போது ஊருக்குள் கள்ளச்சாராயம் பெருகியிருந்தது. போலீஸார் கண்டுகொள்ளாததால் எனக்கும், போலீஸாருக்கும் இடையில் பலமுறை சண்டை வரும். அவர்களும் என்னைப் பழிதீர்க்க நேரம் பார்த்திருந்தார்கள். அப்போது (2000-ம் ஆண்டு) அதிராம்பட்டினத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அதில் நான்தான் முக்கியக் குற்றவாளி எனக் கைது செய்தார்கள். கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். ஜாமீனில் வெளிவந்ததும் சென்னை மண்ணடிக்குக் குடிபெயர்ந்தேன்.

சமயம் சார்ந்து உள்ள மரபுகள் பற்றியும், தமிழ் மரபை இன்னொரு மரபு ஆயிரம் ஆண்டுகாலமாக எப்படியெல்லாம் அடிமைப்பட வைத்திருக்கிறது என்பது பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் மேடைகளில் பேசி வருவது தான் எனக்கு முக்கிய வேலை. கடந்த 2002-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட் டர்களை போலீஸார் கண்டெடுத்தனர். இதை நான்தான் மறைத்து வைத்திருந்ததாக என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதுதான், அந்தக் கொடுமை நடந்தது. மும்பை காட்கோபர் பகுதியில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து இரண்டு பேர் பலியானார்கள். அதில் நான்தான் கைப்பைக்குள் குண்டு வைத்து, வெடிக்க வைத்ததாக மும்பை போலீஸார் விசாரணைக்காக என்னைக் கொண்டு சென்றனர். சொல்லப்போனால் போலீஸார் என்னை 26.11.02-ம் தேதியன்று கைது செய்தனர். 29-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியும் போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பி வைத்தார். இதைப் பற்றி பத்திரிகைகளிலும், உங்கள் குமுதம் ரிப்போர்ட்டரிலும் என்னைப் பற்றி செய்தி வெளியானது.

மும்பையில் குண்டு வெடித்தது டிசம்பர் 2-ம் தேதி. போலீஸாரின் கஸ்டடியில் இருந்த நான், எப்படி மும்பை போய் குண்டு வைக்க முடியும்?. நான் முஸ்லிம் என்பதற்காகவே தீவிரவாதியாக சித்திரிக் கப்பட்டேன். மராட்டிய போலீஸார் என்னை சித்திரவதை செய்தனர். என்னைப் போலவே இருபத்தைந்து அப்பாவிகள் சிறையில் இருந்தனர். மும்பை வழக்கில் என் மீது பொடா சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டனர். மும்பை தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். தமிழக போலீஸாரின் கஸ்டடியில் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபித்ததால் `நான் குற்றவாளி அல்ல’ என விடுதலையாகிவிட்டேன். அதிராம்பட்டினம் டிரைவர் கொலையில் இருந்தும் விடுதலையாகிவிட்டேன். டெட்டனேட்டர் பதுக்கியிருந்ததாக போலீஸார் தொடுத்த வழக்கில் சிறையில் நீண்ட காலம் இருந்ததால், நீதிபதி பெயில் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதன்பிறகு தமிழ்நாடு உளவுத்துறையும், மத்திய உளவு அமைப்புகளான ஐ.பி.யும் என்னைச் சுற்றியே வருவார்கள். நானும் அவர்களிடம் சகோதர பாசத்துடன்தான் பழகி வந்தேன். கடலூர் மத்திய சிறையில் இருக்கும் போதே, பழ.நெடுமாறன் உள்பட பல முக்கியமான மனிதர்கள், மனித உரிமை ஆர்வலர்களிடம் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இதைப் பார்த்த உளவுப் பிரிவு போலீஸார், `அவர்களோடு உங்களுக்கு என்ன தொடர்பு? தடை செய்யப்பட்ட அமைப்புகளைப் பற்றி எங்களுக்குத் தகவல் சொல்லுங்கள்?’ என்று நிர்ப்பந்தித்தனர். நானோ, `என்னால் மாமா வேலை பார்க்க முடியாது’ என முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டேன். இதில் என் மீது போலீஸாருக்கு ஏக கோபம்.

தமிழ் மரபு சார்ந்து கூட்டங்களில் பேசும்போதெல்லாம், உளவுப் பிரிவு போலீஸார், `நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். மற்ற சமயத்தவர்கள் பற்றிப் பேசுவது மிகவும் ஆபத்தானது’ என்றெல்லாம் சொல்வார்கள். நான் ஒருமுறை சவூதிக்குப் போய் வந்தேன். அங்கு வெளிநாட்டு பிரஜை என்பதற்கான அடையாள அட்டை யை நான் ரினீவல் (புதுப்பிப்பு) செய்யவில்லை. உடனே என்னை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

நான் சவூதிக்குப் போய் வந்ததைத் தெரிந்து கொண்ட ஐ.பி. போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். `நீ அல்கொய்தா, லஸ்கர் – இ – தொய்பா அமைப்புகளின் தொடர்புகளை மேம்படுத்திக் கொள். அவர்களின் செயல் பாடுகளை எங்களுக்குச் சொன்னால் வேண்டிய பணம் தருவோம். உன் குடும்பத்திற்கும் உதவி செய்வோம். உன்னால் எளிதாக தொடர்புகளை ஏற்படுத்த முடியும்’ என்றனர். நான்,`அப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் போலீஸ்,தீவிரவாதிகள் என ரெண்டு பக்கமும் எனக்கு ஆபத்து உள்ளது. என்னால் முடியாது’ என்று சொல்லிவிட்டேன்.

இதன்பிறகு நான் `லஸ்கர் – இ – தொய்பா’ தீவிரவாதி என்பதைப் போலவே போலீஸார் பிரசாரம் செய்தார்கள். நரேந்திர மோடி சென்னை வந்தபோது `முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று சொல்லி என்னைக் கைது செய்து, பதினெட்டு நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த நேரத்தில் தான் என்னைச் சுற்றி போலீஸார் வளையம் போட ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிறன்று (4-ம் தேதி) மண்ணடி அங்கப்பநாயக்கர் தெருவில் பள்ளிவாசல் தொழுகை முடித்துவிட்டு ஓட்டலில் நண்பர்களோடு டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எஸ்.ஐ.யூ (ஸ்பெஷல் இன் வெஸ்டிகேஷன் யூனிட்) போலீஸ் எஸ்.ஐ. அசோக் என்னை மறைந்திருந்து நோட்டம் விட்டார். எனது நண்பர்களும், `அவர் நீண்ட நேரமாகவே உங்களை வாட்ச் செய்கிறார்’ என்றனர். நான் அசோக்கின் செல்போன் எண்ணை வாங்கி அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் போனை எடுக்கவில்லை. உடனே, உளவுப் பிரிவு போலீஸாருக்குப் போன் செய்து விசாரித்தேன். அவர்களும் மழுப்பிவிட்டனர். அந்தப் பகுதியில் மஃப்டியில் பல போலீஸார் நின்று கொண்டிருந்தனர். ஏதோ நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து தப்பி, நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?’ என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர்.

கடந்த 11-ம் தேதி எனது நண்பர் ரிட்டயர்டு எஸ்.பி ஜேம்ஸ்ராஜ் வசிக்கும் சூளைமேடு வீட்டிற்குப் போன கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சுதர்சன், என்னைத் தேடி வந்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், தன்னை சூளைமேடு ஸ்டேஷன் ஏட்டு என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். விசாரிக்கும்போதுதான் உண்மை நிலவரம் தெரிந்துள்ளது.

`இறைவனால் உருவாக்கப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றிப் பறிக்காதீர்கள்’ என்று குரான் சொல்கிறது. ஆனால், என் உயிரைப் பறிக்க போலீஸார் அலைந்து கொண்டிருக்கின்றனர். எனக்கும், இஸ்லாத்தின் மார்க்க அறிஞர்களுக்கும் இடைவெளி இருக்கிறது. அதனால் தவ்ஹீத் துகள், த.மு.மு.க என யாருமே எனக்காகக் குரல் கொடுக்க வர மாட்டார்கள். அதுதான் போலீஸாருக்கு கூடுதல் தைரியத்தைக் கொடுத் திருக்கிறது. இறைவன் கருணையால்தான் நான் உயிர் தப்பியிருக்கிறேன். என் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளும் புனையப்பட்டவைதான். எதிலும் எனக்குச் சம்பந்தம் கிடையாது. நாங்கள் இறைப்பணியையும், மக்கள் பணியையும் மட்டும்தான் செய்து வருகிறோம். இதற்காக எங்கு குண்டு வெடித்தாலும் தவ்ஃபீக்தான் காரணம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?.

நான் அல்கொய்தாவும் இல்லை. லஸ்கர் – இ – தொய்பாவும் இல்லை. என்னைப் படுகொலை செய்ய போலீஸார் செய்யும் சூழ்ச்சியை மாநிலம் முழுவதும் கூட்டம் போட்டு எங்கள் அமைப்பினர் அம்பலப்படுத்துவார்கள். அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றதோடு முடித்துக் கொண்டார் தவ்ஃபீக்.

ஆனால், கியூ பிரிவு போலீஸாரோ, ” என்னைக் கொல்ல முயற்சிக் கிறார்கள் என்று தவ்ஃபீக் சொல்வது வீண் விளம்பரம்தான். அப்படியொரு எண்ணமே போலீஸாருக்குக் கிடையாது. கேரளாவில் உள்ள வழக்குகளில் அவர் மீது பிடிவாரண்ட் போடப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் ரிட்டயர்டு எஸ்.பி வீட்டில் தவ்ஃபீக்கைத் தேடி போலீஸார் சென்றுள்ளனர். காரணம், அவர் வீட்டில்தான் வாடகைக்கு அலுவலகம் எடுத்துச் செயல்பட்டு வந்தார் தவ்ஃபீக். `இறைவன் ஒருவனே’ அமைப்பினர் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் உள்பட மூன்று பேரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்திருந்தனர். அவர் தவறே செய்யவில்லையென்றால் எதற்காக ஓடி ஒளிய வேண்டும்? போலீஸார் மீது அவதூறு பிரசாரத்தைக் கிளப்பு வதுதான் அவரது வாடிக்கை” என்கின்றனர்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்
Advertisements

2 பின்னூட்டங்கள் »

 1. எனக்கும், இஸ்லாத்தின் மார்க்க அறிஞர்களுக்கும் இடைவெளி இருக்கிறது. அதனால் தவ்ஹீத் துகள், த.மு.மு.க என யாருமே எனக்காகக் குரல் கொடுக்க வர மாட்டார்கள். அதுதான் போலீஸாருக்கு கூடுதல் தைரியத்தைக் கொடுத் திருக்கிறது. இறைவன் கருணையால்தான் நான் உயிர் தப்பியிருக்கிறேன். –

  மேற்கண்ட வாக்கியங்கள்
  எந்த ஒரு இயக்கத்தையும் சாராத – அப்பாவிகள் காவல் துறையினரால் பாதிக்கப்பட்டால் உதவ யாரும் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் அதே நேரத்தில் – உதவி கேட்டு மேற்கண்ட இயக்கங்களை தவ்பீக் தொடர்பு கொண்டாரா அல்லது கேட்டும் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.

  பொறையாத்தான்

  பின்னூட்டம் by Anonymous — மே 22, 2008 @ 4:20 முப

 2. தமிழக காவல் துறையின் ‘இஸ்லாமிய பயங்கரவாத’ பூச்சாண்டி , ‘என்கவுண்டர்’ மிரட்டல்கள் மற்றும் அது சம்பந்தமாக அப்பாவிகள் துன்புறுத்தப்படுவது பற்றி தனது நிலைப்பாட்டை தெளிவாக த.மு.மு.க தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

  இஸ்லாமியர்களை பற்றிய பய உணர்வை – மாற்றுமத சகோதரர்கள் மக்கள் மத்தியில் விதைத்துக்கொண்டே – தமிழக மக்களால் புறக்கனிக்கப்பட்ட ‘சந்து’ முன்னனி (சந்துகளில் மட்டுமே கூட்டம் நிரம்பச்செய்யும் அமைப்பு) தலைவர் – வீரத்துறவி (வீரத்தைதை துறந்த வில்லாதி வில்லர்!) இராம கோபால அய்யருக்கு ‘பப்ளிசிட்டி’ கொடுக்கும் தமிழக காவல் துறை கண்டிக்கப்படவேண்டியது.

  த.மு.மு.க தனது செல்வாக்கை பயன்படுத்தி – அப்பாவி முஸ்லிம்கள் பாதிகப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வரை அணுக வேண்டும்.

  பின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — மே 22, 2008 @ 12:43 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: