தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 23, 2008

ஊடக வலையில் முஸ்லிம்கள்

Filed under: ஊடகம், முஸ்லிம்கள், IIP — முஸ்லிம் @ 7:56 பிப

இஸ்லாமிய இணையப் பேரவையில் வெளிவந்துள்ள கட்டுரை. மேலும் பல கட்டுரைகள் படிப்பதற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் இணையத் தளத்திற்கு (http://www.iiponline.org/) சென்று படியுங்கள்.

ஊடக வலையில் முஸ்லிம்கள்

பெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கை வகிக்கிறது. இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிகொண்டுருக்கிறது. செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதனை உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது ஊடகத்தின் உச்சானி கொம்பாக இருக்கின்ற இணையதளம். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை முழுவீச்சுடன் செலுத்தியுள்ளது.

இன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் கலங்கப்படுத்தபடுகிறது, காரணம் இன்று ஊடகம் ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.

ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர். ஆதிக்கவாதிகள் நிரம்பி வழியும் ஊடகங்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொண்டு வருகின்றன. ‘முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள்’ என்ற மதவெறிக் கருத்தை இவை வெளிப்படையாக மக்களிடையே பரப்புகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியாமல் மூலையில் முடங்கிக்கிடக்கிறார்கள். கல்வியில் முன்னேறாத சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும்? மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதே மீடியாவைக்கொண்டு பதில் தாக்குதல் எப்படிக் கொடுக்கமுடியும்.

இஸ்லாத்திற்கு எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துப்போரில் முழுவீச்சுடன் செயல்படுகின்றனர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தொலைகாட்சி பார்ப்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் சுலபமாக விழ வைத்திருக்கிறார்கள்.

ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற ஊடகம், இன்னொரு பக்கம் தீவிரவாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் பாசிசவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது.

மாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க “முஸ்லிம் தீவிரவாதிகள்”, “இஸ்லாமிய அடிப்படைவாதிகள்” என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, ‘சரணடைய மாட்டேன்’ சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்’ என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் தியாகிகள் எனப்போற்றப் படுகிறார்கள் ஊடகங்களால்.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா?

பர்தா பாதுகாப்பு என்கிறது இஸ்லாம். இல்லை பழமைவாதம் என்கிறார்கள் எதிரிகள். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருந்தால் ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப்போரில் வாள் வீசுவது யார்? சற்று சிந்தனை செய்யவேண்டாமா? இன்று ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கெதிரான அவர்கள் செய்யும் பனிப்போரில் உச்சகட்டத்தை அடைந்துயிருக்கின்றார்கள் என்றால் யார் காரணம்? நாமல்லவா சகோதரர்களே! இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. 9/11 நிகழ்வுகளுக்கு பின்பு இஸ்லாம் பயங்கரவாதம் என்கின்ற ஒரு தவறுதலான கருத்தாக்கம் ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தைப் பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியாவில் மதவெறியர்களின் கைப்பாவையாகச் செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக் கைதிகள் கொல்லப்படுவது போன்ற வெறிச்செயல்களை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை. உலக வர்த்தகமையக் கட்டடத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், பாதுகாப்புப் படைகளால் கொல்லப்படும் காஷ்மீரியாகட்டும், வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வேதனையும் மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே! ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக – மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.

சோவியத் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமே பெரிய எதிரியாகத் தெரிகிறது. காரணம் அங்கெல்லாம் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இஸ்லாம் தங்கள் நாடுகளை ஆட்கொண்டு விடுமோ என அஞ்சுகிறார்கள். எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போட வேண்டும் என்ற தீய நோக்கோடு, அனைத்து ஊடகங்களும் அமெரிக்க, யூத பணத்திற்கு அடிமையாகி அவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே மாறி மாறி ஊடகத்தின் மூலமாக பரப்பி வருகின்றன.

ஆனால் என்ன செய்வது, அறிவின் பிறப்பிடமான இஸ்லாமிய மக்களுக்கு கல்வியே இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதற்கு வறுமையும் மிகப்பெரிய எதிரியாக உள்ளது, இந்த வறுமையை போக்கக்கூடிய இடஒதுக்கீடும் பாசிசத்திற்கு எதிராக உள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

மனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண்-பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும்? பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது. பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம்பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம் அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை! எமக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது.

மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம்தான். பீகாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்குகூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம்தான் உள்ளது. குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத்திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.

முஸ்லிம்கள் உயர் பதவிகளில், மேற்கு வங்கத்தில் பூஜ்யம். மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில்கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம்தான் உள்ளனர். மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில்கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ அவர்களின் பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர். வகுப்புவாதிகள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் ‘குற்றவாளி’களாகவும், பாசிசவாதிகள் ‘நீதிமான்’களாகவும் உள்ளனர்.

இவ்வாறு இஸ்லாமிய மக்கள் வறுமையிலும் கல்வியிலும் மிகவும் தாழ்வு நிலைமையில் இருக்க இதற்கு மருந்தாக இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டையும் கிடைக்கவிடாமல் எதிர்க்கிறது மனித வடிவில் மிருகமாக இருக்கிற பாசிசம். அவ்வாறுயிருக்கையில் எவ்வாறு இஸ்லாமிய சமூகம் ஊடகத்துறையிலும், மற்ற ஏனய துறையிலும் முன்னேற முடியும். ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்கின்ற மாயத்தோற்றத்தை பாசிச சக்திகள் மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள்.

ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.

இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர்.

இப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவனாக!

ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: