தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 22, 2008

குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!

Filed under: அரசியல், IDMK — முஸ்லிம் @ 6:04 முப
இந்திய தேசிய மக்கள் கட்சியின் எழுச்சிமிகு கொள்கைப் பாடல்களை கேட்பதற்கு அல்லது டவன்லோட் செய்வதற்கு இங்கு சொடுக்கவும்.
www.idmk.org
‘குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!

60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் கழிப்பறை கட்டியதில் தான் முஸ்லிம்கள் முன்னேறி இருக்கிறார்கள். தலித்களைவிட கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் மிக, மிக பின் தங்கி உள்ளனர். இதற்கு காரணம் தகுதியற்ற தலைமைத்தனம் என்ற பிரண்ட்லைன் கூற்றை மறந்துவிட முடியாது. முஸ்லிம் லீக்கை குறை சொல்லி உரிமை, உணர்வு என வார்த்தைகளில் உஷ்ணத்தை ஏற்றி ஆர்ப்பாட்டம், போராட்டம், என போலி வேஷம் போட்டு ஆரவாரத்தோடு புறப்பட்ட த.மு.மு.க விழலுக்கு இறைத்த நீராய் 60 ஆண்டு முஸ்லிம் லீக்கின் ஏமாற்றும் வேலையை கச்சிதமாய் செய்து இருக்கிறது. ஆம் 2 சீட்டுக்கு திராவிட கட்சிகளிடம் அடகு வைக்கும் சாதனையை வெற்றிகரமாய் நிகழ்த்தி இருக்கிறது. கோவை 19 உயிர்கள் பலி, கப்ருஸ்தான் இடிப்பு, பள்ளி உடைப்பு, மீரட், மண்டைக்காடு, கான்பூர், குஜராத், என சமூகத்தின் அவலங்களை காட்சி பொருளாய் கடை விரித்து, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றவர்கள்….

இன்று அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் சூது வலையில் சிக்கி, உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அரசியல் இல்லை, தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர்பல்டி, இட ஒதுக்கீட்டு துரோகத்திற்கு பாராட்டு, அரசியல் ஹராம், ஈடுபட மாட்டோம் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மேடைதோறும் விளம்பிய காட்சி, நடிப்பதில் நடிகர்களை மிஞ்சிய மாட்சி, லட்சியத்தை மாற்றி, மாற்றி பேசுவதிலும் தன்னை நம்பி வரும் தொண்டர்களை முட்டாளாக்கி வைத்துக் கொள்வதில் அரசியல்வாதிகளை விஞ்சிய அரசியல் வியாதிகள் த.மு.மு.க என்றால் மிகையில்லை. இளைஞர்களே சிந்தியுங்கள்.

சமுதாயத்தை மேய்ப்பவர்கள் போல் காட்டிக் கொண்டு சமூகத்தை ஏய்த்தவர்கள், ஒற்றுமையை உடைத்து இமாலய சாதனையைச் செய்தவர்கள், மற்றவர்களின் பார்வைகளில் இஸ்லாமிய சமூகத்தை சர்க்கஸ் கோமாளிகளாக காட்சி அளிக்க வைத்தவர்கள். இவர்களின் குழப்பத்தின் உச்சகட்டத்தை கண்டு நம்மை ஏமாற்றும் அரசியல் கட்சிகளில் இளைஞர்கள் தஞ்சம் புக வேண்டிய நிலையை ஏற்படுத்தியவர்கள். இன்று எங்கே நம் த.மு.மு.க கூடாரம் கலைந்து விடுமோ! என அஞ்சி அற்புதமான வாய்ப்புகளை விட்டு விட்டு அரசியலைப் புறக்கணித்த துறவிகள், இந்திய தேசிய மக்கள் கட்சியை (ஐனுஆமு) ஆரம்பித்த பிறகு முன்னேற்றம் என சமுதாயத்தை பின்னேற்ற அரசியல் குழப்பத்தை மீண்டும் துவக்கி இருக்கின்றனர். தி.மு.க.விற்கே எங்கள் ஆதரவு என நஞ்சு வைக்கும் வஞ்சகர்களின் வாயில் கதவைத் தட்டி இருக்கிறார்கள். வாழ்க என சொல்ல இதயம் வலிக்கிறது. இளைஞர்களே சிந்தியுங்கள்.

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுத்திட, சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமித்திட சமூகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பிட, நம்மைக் கருவருக்கும் அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்து வஞ்சம் செய்யும் சமுதாயத் தலைவர்கள் (ளழசசல) துரோகிகளின் தூக்கு கயிற்றை அறுத்து எரிந்திட சமுதாயத்து எண்ணங்கள், உணர்வுகள், கனவுகள், இவற்றிற்கு வடிவம் கொடுத்திட கடந்த இரண்டு ஆண்டுகளாக களப்பணியாற்றி தலித், கிருஸ்துவ, முஸ்லிம்களை அரவணைத்துச் சென்றிட முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சியைத் துவக்கி சென்னையில் தலைமையகம் அமைத்து, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்கான வேலையை முடித்து, துண்டு பிரசுரம், சி.டி.க்கள், கலந்துரையாடல், பொதுக்கூட்டம், கருத்து பரிமாற்றம், உலமாக்கள், அறிவு ஜீவிகள் சந்திப்பு, என சமூகத்தின் சிந்தனையைத் தூண்டி அரசியல் சார்பற்ற அமைப்புகளை எல்லாம் ஒன்றினைத்து எதிர்கால பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நம் அரசியல் பலத்தை காட்டிய களத்தில் நிற்கும்போது ஆம் கனிபறிக்க மரம் ஏறும் போது கருநாகம் காலைச் சுற்றுமாம்.

அதுபோன்று தேர்தல் வரும்போது எல்லாம் சில்லரைகளுக்காக குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொள்கையை கோடிக்கு விற்றவர்கள், வாய்ப்பைத் தவற விட்டு விட்டு, மீண்டும் சமூகத்தின் வாக்கு வலிமையை சிதைக்க அன்று மார்க்கத்தில் குழப்பம், இன்று அரசியலில் குழப்பம் செய்ய வருகின்றனர். இளைஞர்களே எச்சரிக்கை. ஜமாத்தார்களே, சமுதாயப் பெரியவர்களே, ஆலிம் பெருமக்களே, ஆன்றோர்களே, குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர். சாட்டையடியில் குழப்பவாதிகளின் கொட்டம் அடங்கட்டும். குள்ள நரி செயல்கள் ஒடுங்கட்டும். அதன்மூலம் நம் அரசியல் வலிமை பிறக்கட்டும், மற்றவர்கள் நம் அரசியல் வலிமையை உணரட்டும். நம் தனித் தன்மை தமிழ்த் தரணியில் சிறக்கட்டும், வருங்கால சந்ததிகள் நம்மைப் போற்றட்டும்.

குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல முற்றுப்புள்ளி வைப்போம். வாரீர்! வாரீர்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
50ஃ330இ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 600 005
தமிழ்நாடு செல் : 994380211, 9344510369, 9786011679, 9443021050

மார்ச் 17, 2008

தெறிந்து கொள்ளுங்கள் இதுதான் தமிழ் முஸ்லிம் அரசியல்

Filed under: அரசியல், இஸ்லாம், தமிழ் முஸ்லிம் — முஸ்லிம் @ 2:48 பிப

நான் எழுதிய ஒரு கட்டுரையில், ” இன்றைய முஸ்லிம் சமூகம் வலப்பக்கம் திரும்புவதா, இடப்பக்கம் போவதா, நேரே செல்வதா அல்லது வந்த இடத்துக்கே திரும்புவதா என்று புரியாமல் நாற்சந்தியில் நின்று தவித்துக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கு உடனடியாக ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பினேன் – ஆதங்கப்பட்டேன். ஆனால் அது நடப்பதுபோல் தெரியவில்லை என்பது மட்டுமல்ல; நடப்பதற்கான அறிகுறிகள் கூடத் தென்படக்காணோம்.

மகள் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அமீர் ஜவஹர், தமிழன் தொலைகாட்சியில், “ஒற்றுமையை நோக்கி..” என்கிற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நம் முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஒற்றுமையின்மையின் காரண காரியங்கள், அது எற்படுவதற்கான வழி வகைகள் என்று பல தரப்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார்கள் இதில் என்னுடைய பேட்டியும் இரண்டு பகுதிகளாக இடம் பெற்றுள்ளது

இந்த நிகழ்ச்சி பற்றி கருதுச் சொன்ன மவுலவி பீஜே இதை ஒரு கோமாளிக்கூத்து என்று ஆரம்பத்தில் கூறியதாக வருத்தப் பட்ட அமீர், பிறகு பீஜே தன் கருத்தை மாற்றிக் கொண்டதாகவும் சொன்னார்.

ஆனால் சில தினங்களுக்கு முன் வின் தொலைக்காட்சியில் நடந்த அவரது கேள்வி-பதில்’நிகழ்ச்சியில் “பிரிவு ஏற்படத்தான் செய்யும். ஒரே குழுவாக இருப்பது நடக்காத காரியம். நடப்பது தவறு. அதைச்சுட்டிக் காட்டி நல்லதுகளை எடுத்துச் சொல்கிறோம். அப்போ கொஞ்சம் பேர் அங்கிருந்து பிரிந்து நம்மகிட்டே வரத்தான் செய்வாங்க. அதைத் தடுக்க முடியாது. அப்படி பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே நாமெல்லாம் ஒண்ணாயிடுவோம். ரசூலுல்லா காலத்தில் குறைஷிகள் ஒண்ணாத்தான் இருந்தாங்க, பிறகு பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே ஒண்ணாயிடல்லியா” என்று ஒரு வினோதமான காரணத்தை முன் வைத்ததன் மூலம் தன்னைப் பொறுத்தவரை ஒற்றுமைக்கான வாசற்கதவை இழுத்து மூடி விட்டார் என்றே கொள்ள வேண்டியதாக இரூக்கிறது.

இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலர் ஹக்கிம் சத்தார் பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெற்ற பேரணியைக் குறித்துப் பேசுகையில், “உணர்ச்சி வசப்பட்டு என்ன பிரயோஜனம் ? அறிவு பூர்வமாகச் சிந்தியுங்கள். முஸ்லிம் லீக் காரர்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கக் கூடியவர்கள்” என்று தங்கள் கையாலாகத் தனத்துக்கு சப்பைக்கட்டு கட்டினார். பொதுவாக முஸ்லிம் லீக் கட்சியினர் Easy-chair intellectuals – சாய்வு நாற்காலி சண்டப்பிரசங்கிகள் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது.

அதை நிரூபிப்பது போலவே ஹக்கிம் சத்தாரின் பேச்சும் அமைந்தது. அதைவிட கலிமாச் சொன்ன ஒவ்வொரூ முஸ்லிமும் முஸ்லிம் லீக் தான் என்று அவர் அடித்த ஜோக்கை நினைத்து யாரும் வாயால்(?) சிரிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உண்மை.

ஒரு ‘இஃப்தார்’ நிகழ்ச்சி. நான் தொகுத்து வழங்கினேன். அநேகமாக எல்லா முஸ்லிம் தலைவர்களும் ஆஜர். எல்லோருமே ஒற்றுமையை வலியுறுத்தியே பேசினார்கள். கடைசியாக தேசீய லீகைச் சேர்ந்த அப்துல் காதர் என்கிற பெரியவர் பொட்டார் ஒரு குண்டு, “என்ன எல்லாரும் ஒத்துமை ஒத்துமைன்னு பேசிக்கிட்டு இருக்கீக. எல்லாரும் அவங்க, அவங்க அமைப்பை கலச்சிப்புட்டு எங்க கட்சிக்கு வந்துடுங்க எல்லாம் சாரியாப் போகும் ஒத்துமை வந்துடும் என்றார்.” – கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா ?

இப்போது அந்த தேசிய லீகுக்குள்ளேயே பிளவு. ‘கோனிக்கா’ பஷீர், தான் தான் இன்னமும் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியின் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் செய்யது இனாயத்தூல்லா சாகிபை தலைவராக அறிவித்துள்ளார்கள். இவர் பல்வேறு இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் முகமாக எடுக்கப்பட்ட முயற்சிகளில் முனைந்து முன் நின்றவர். தன்னுடைய நோக்கம் பதவியல்ல; ஒற்றுமைக்கான தொடர்ந்த முயற்சிதான் என்று தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

ஒற்றுமை பற்றி ஒரு தலைவரிடம் நான் பேசியபோது, “நானும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்கிறேன். ஆனால் அபூ ஜஹில்களோடு யாருங்க சேருவா” என்று என்னை அதிர வைத்தார்.

நான் இதற்கு முன்பு ‘தஃப்ரகில்’ எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் ஒற்றுமை என்கிற விஷயத்தில் மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஆசைப்படுகிறார்கள். ஆதங்கப் படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தலைவர்கள் மத்தியிலோ அல்லது தொண்டர்கள் மத்தியிலோ இப்போதுள்ள நிலையிலிருந்து மாறுவதற்கான எந்தவிதமான அறிகுறிகளையும் காணோம். .

ஆக, We are back to square one – நாம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி இருக்கிறோம். and we are at the cross-roads – நம் சமூகம் நிற்பது நாற்சந்தியில்.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.