தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 1, 2008

இந்துத்துவா — பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு?

தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர் இந்து மதத்தை நம்புகிறவர்கள்தான். அந்த மதத்தை தூக்கிப் பிடிப்பவர்கள்தான். ஆனால், அங்குதான் இந்து மதத்தின் கலாச்சார சின்னமாக கருதப்படுகின்ற இராமனை, எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்க முடிகிறது.

இது வடநாட்டு பார்ப்பனர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது எப்பொழுதுமே ஒரு பிடிபடாத ஆச்சர்யம். இந்த ஆச்சர்யத்திற்கு காரணகர்த்தா அல்லது நாயகனின் பெயர்தான் தந்தை பெரியார்.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்துத்துவா எப்படி காலூன்றுவது. இதற்காக அவர்கள் கடைப்பிடிக்கின்ற உத்திகளில் ஒன்றுதான் கடந்த ஜனவரி மாதம் 24ந் தேதி தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இரவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.சரி, குண்டு வைத்தது யார்?

சுலபமான பதில் இசுலாமியர்கள் என்பதுதான். இப்படித்தான் மக்கள் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது.

ஆனால், உண்மை என்ன? ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான்.

இந்த செய்தியை உள் வாங்கிக் கொள்ள வேண்டுமென்றால் 1948 ஜனவரி 30க்குச் சென்று திரும்ப வேண்டும்.

நாதுராம் கோட்சே என்ற மகாராஷ்டிரா சித்பவன் பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றான். எதற்கு சுன்னத்? ஏன் பச்சை? பதில் மிகவும் எளிது.

இந்திய மக்களால் அதிகம். நேசிக்கப்பட்ட காந்தியை ஒரு இசுலாமியன் கொன்றான் என்ற வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் கலவரத்தை விதைத்து இசுலாமிய இனப் படுகொலையை அறுவடை செய்யலாம் என்பதுதான்.

சரி, இப்பொழுது கடந்த ஜனவரி மாதம் 24ந் தேதி நடந்த தென்காசி சம்பவத்திற்கு வருவோம். சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வு அதிகாரிகள் முதலில் கைப்பற்றியது முசுலீம்களின் தொப்பிகள் சிலவற்றைத்தான்.

ஆனால், சங்கராச்சாரியை கைது செய்தது போல, தென்காசி சம்பவத்திலும் போலீசார் நேர்மையுடன் செயல்பட்டு இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த ரவி பாண்டியன், குமார், நாராயண சர்மா போன்றோரையும் இன்னும் சிலவரையும் கைது செய்தனர்.

அந்த வகையில் தமிழக அரசு சரியான நிலைப்பாடு எடுத்தது மிகவும் பாராட்டத்தகுந்தது.

குண்டு வெடித்தபோது அலறிய நாளிதழ்கள், குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ். காரர்தான் என்று தெரிந்ததும் பத்திரிகா தர்மம் பேசும் நாளேடுகள் அடக்கி வாசித்தன. இந்து நாளேடு கூட 18.2.2008 அன்று இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

பிப்ரவரி 6, 2008இல் விடுதலையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டு வெடிப்பு குறித்து உளவுத் துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஒரு முறை ஏற்படாதவண்ணம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் 2002-ஆம் ஆண்டு, சதுமுகை என்னும் இடத்தில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், முனீஸ்வரன் சிலையை சிதைத்தும் இந்துத்துவாகாரர்கள் செய்த சதிச் செயலை தமிழர் தலைவர் ஞாபகப்படுத்தியிருந்தார்.

இதுமட்டுமா? முசுலீம்களின் வீட்டு முகவரியை குறித்து வைத்துக் கொண்டு, இந்துத்துவாவாதிகளால் கோர தாண்டவம் நடத்தப்பட்ட மும்பாய் கலவரம் ஆகட்டும், தொலைபேசி கையேட்டை கையில் வைத்துக் கொண்டு, காவல் துறை உதவியுடன் இந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் நடத்திக் காட்டிய மனித நேயமற்ற படுகொலைகளும், இவை எல்லாம் எதைக்காட்டுகிறது என்றால், தென்காசி சம்பவத்தையோ, முத்துப்பேட்டை சம்பவத்தையோ எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதைத்தான்.

நடக்கப்போகும் மும்பை போன்ற, குஜராத் போன்ற கலவரங்களுக்கு கால் கோளாகத்தான் கருத வேண்டும். ஆக, கலவரங்களை விதைக்கவும், தூண்டவும், களத்தில் இறங்கி படுகொலைகளை நிகழ்த்தவும் மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்றை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் இயங்கி வருவதை இனிமேலாவது கவனத்தில் எடுத்துக் கொண்டு, இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடவேண்டும்.

அதற்கான அழுத்தத்தை மதசார்பற்ற அமைப்புகள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தென்காசியில் நடந்த சம்பவத்தின் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரரான குமார் பாண்டியனின் வாக்கு மூலம் நமது கருத்துக்கு மேலும் வளம் சேர்க்கிறது. தனது வீட்டில் 4 பேர் பலியான போதும், இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. குண்டுவெடித்தத்தின் நோக்கமும் நிறைவேறவில்லை என்கிறார் கூறுகிறது.

இதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது. ஆனால், இது தமிழ்நாடு என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். பகுத்தறிவு பாதையில் இந்த மண் பண்பட்டு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருப்பதை இன்னமும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதை எப்படியாவது மாற்றியமைத்திட வேண்டுமென்று தான் இந்துத்துவாதிகள் இப்படிப்பட்ட தொடர் நிகழ்வுகளை (குண்டுவெடிப்பு, கலவரங்கள்) நிகழ்த்தி வருகின்றனர்.

சில அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இரு சமுதாயங்களுக்கிடையே மத ஒற்றுமை என்பதைக் காட்டிலும் தங்களின் வாக்கு வங்கி சிதறக்கூடாது என்பதிலிலேயே குறிக்கோளாக இருந்து வருகின்றன.

அதே போல, இந்துத்துவாவாதிகளின் சித்தாந்தத்தின் இடுப்பை முறித்துப் போடுகின்ற வலிமையை, சுயமரியாதை இயக்கங்களுக்குப்பிறகு, பொதுவுடைமை இயக்கங்களுக்கு இருப்பதால் ஆர்.எஸ்.எஸ்.ன் பார்வை சமீப காலங்களில் பொதுவுடைமை இயக்கங்களின் அலுவலகங்களுக்கு குண்டு வைப்பதும், பொதுவுடைமை இயக்கங்களின் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் என்று தனது ஆக்டோபஸ் காரங்களை நீட்ட ஆரம்பிக்கிறது.

பந்தடிக்க துப்பில்லை என்பதால், நன்றாக ஆடுபவர்களின் கால்களைத் தாக்குவது என்ற போக்குதான் இது.

இதற்கு அத்தாட்சிதான் புதுடில்லியிலும், புனே உள்ளிட்ட இடங்களில் மார்க்ஸ்ட் அலுவலகங்கள் மீதும், தொண்டர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.

இவர்கள் நீட்டி முழக்குகின்ற இந்துத்துவா கொள்கையில் இராமன் பிறந்த இடமென சொல்லப்படுகின்ற உத்திர பிரதேசத்திலே பாபர் மசூதியை இடித்தும்கூட, இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட முடியாமல் தனது கோர பற்களை தென்னகத்தில் காட்ட ஆரம்பித்துள்ளன.

இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட ஒரு இயக்கம் நடத்திய தென்காசி குண்டு வெடிப்பு நாளேடுகளால் புறக்கணிக்கப்பட்ட பிறகு, இதன் பின்னணியைப் பற்றி மக்களும், அரசுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமையை, அ.மார்க்ஸ், கோ. ககுமாரன், ரஜினிகாந்த் (வழக்குரைஞர்), உதயம் மனோகரன், சீனி சுல்தான், தமயந்தி, செங்கொடி, அப்துல் ரஹ்மான், ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட உண்மை அறியும் குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து அதை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

தென்காசி சம்பவத்தில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ரவி பாண்டியனுக்குச் சொந்தமான கேபிள் டி.வி. அலுவலகத்தில் வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அமோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவற்றுடன் 90 பேட்டரியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கக் கூடியதாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகள் தயாரிக்கப்பட்டு இரண்டிரண்டாக 7 செட் குண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடையநல்லூர் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தன் தேவையான அமோனியம் நைட்ரேட் கொண்டு வந்து தந்துள்ளார்.

இந்த சதித்திட்டத்தை சரியான வகையில் அடக்கி ஒடுக்காவிட்டால் தென்காசி இன்னொரு கோவை ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

அதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள சிறு நகரம் முத்துப்பேட்டை. சுமார் 10,000க்கும் மேற்பட்ட முசுலீம்கள் இவ்வூரில் வசிக்கின்றனர். பல காலமாக இருதரப்பினரும் ஒற்றுமையாக, பிரச்சனைகள் ஏதுமின்றி அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வந்துள்ளதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனினும் கடந்த 15 ஆண்டுகளாக, அதாவது வினாயகர் ஊர்வலம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அங்கே கலவரங்கள் நடைபெற்று வருகின்றன.

முத்துப்பேட்டை நகரத்திற்குள் நெருக்கடியான சந்துகளில் அமைந்துள்ள முசுலீம் வீடுகள், பள்ளிவாசல்கள் வழியாகவே வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.

நெருக்கமான முசுலீம் வீதிகளில் பட்டாசுகளைக் கொளுத்துதல், துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியை கட்டு இந்து நாடு இந்து நாடு, இந்து மக்கள் சொந்த நாடு -என்பது போன்ற முழக்கங்கள் இட்டுச் செல்லுதல், பள்ளி வாசல்களில் செருப்பு முதலானவற்றை வீசுதல். இவற்றின் விளைவாக முசுலிம் இளைஞர்கள் ஆத்திரப்பட்டு எதிர்வினையாற்றல், அதை ஒட்டி முசுலீம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுதல். இவை தொடர் கதையாகிவிட்டது.

இந்த நாடு இந்து நாடு, இந்து மக்கள் சொந்த நாடு – என்ற முழக்கம் தவிர, ராமர் கோயில் கட்டுவோம் – என்கிற முழக்கம் உட்பட மற்ற அனைத்தையும் அனுமதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

(ரிட் எண் 28996/2005) எனினும் தடுக்கப்பட்ட இந்த முழக்கம் உட்பட வழக்கமான இழிவான முழக்கங்களையும் ஊர்வலத்தினர் முழங்கியதோடு பட்டாசுகளையும் வெடித்துள்ளனர்.

இது மட்டுமா, முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் மீதே இந்துத்துவா சக்திகளால் குண்டு வீசப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் சர்வ கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும், காவல் துறையும் சேர்ந்து அமுக்க முனைவதையும், பிரச்சினையை பெரிதுபடுத்தினால் இந்துத்துவா சக்திகள் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பார்கள் என அரசியல் பிரமுகர்கள் சொல்லி தமது ஜாதிக்காரர்களான வன்முறையாளர்களை காக்க முனைவதையும்,

முசுலீம்கள் செய்ததாக செய்தியை பரப்பும் நோக்கில் இந்த குண்டு வீசப்பட்டிருப்பதையும் உண்மை அறியும் குழு கண்பிடித்திருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இது போன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதற்கு காரணமாக அமைந்து வினாயகர் பொம்மை ஊர்வலம்தான். அது தடை செய்யப்பட வேண்டும்.

தேவையானால், நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமது தர்ஹா ஊர்வலங்களையும் கூட நிறுத்திக் கொள்வதற்கு முசுலீம்கள் தயாராக உள்ளதாக உண்மை அறியும் குழு அறிவித்திருக்கின்றனர்.

ஆகவே, இந்த தென்காசி, முத்துப்பேட்டை சம்பவங்கள் இன்னுமொரு மும்பை, குஜராத், கோவை கலவரப் பிரச்சினை விதம் என்பதை உணர்வைத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

அத்தகைய நிலையை எட்ட வேண்டிய மதசார்பற்ற அமைப்புகள் தகுந்த அழுத்தத்தையும், ஆதரவையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதும், அவசரமானதும் ஆகும்.
http://unmaionline.com/20080402/pa-08.html

மார்ச் 29, 2008

இந்து பாசிசத்தின் உளவியல் – டாக்டர்.ருத்ரன்

Filed under: ஃபாசிசம், இந்து, பாசிசம் — முஸ்லிம் @ 2:53 பிப
தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

“”உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்”, என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

“எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி’ என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. “தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்’ என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் “இதுவே நியாயம்’ என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். “வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்’ என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், “அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை’ என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை “வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்’ அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு “கோணலான கல்வி’ தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.

“திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி’யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. “மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை’ என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், “தர்மம்’ என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் “தான் உயர்ந்தவன்’ எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு “தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்’ என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.

பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், “பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு’ என்பதற்குப் பதிலாக, “யுத்த தர்மம்’ என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

“எதிரிகள் மனிதர்களேயல்ல’ என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. “தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்’, என்பதை மறந்து, “தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் “ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே’ என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் “கொலைவெறி’யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.

எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு “தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி’ எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் “கூட்டத்துக்குத் தலைவன்’ கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது “ராஜநீதி’ என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?

வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; “ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே’ எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான “குயுக்தி’. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். “தன்னலக் குறிக்கோள்’ மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், “வெறியாடும் வாய்ப்பி’லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.

தனி மனிதனுக்கு “தன் வீடு, தன் இடம்’ எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் “தன் இடம்’ என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.

இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, “யுத்தம்’ எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் “கொல்லப்படுமுன் கொல்’ எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, “கூட்டம்’ ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். “தண்டனையைத் தவிர்ப்பதே!’ அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் “வீரர்களின் சேனை’யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் “போர்’ என்றும், அரசு பலத்தை “வீரமெ’ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் “தொற்று நோய்’ போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

· ருத்ரன்,

மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்

Create a free website or blog at WordPress.com.