தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 28, 2007

இட ஒதுக்கீடு – 1 வாரத்தில் அவசர சட்டம் – கலைஞர்

//சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 7-வது மாநாடு நிறைவு விழாவில் அவர், தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக இது வழங்கப்படும் என்றார். (www.msn.com) // (இங்குதான் இடிக்கின்றது!! இது சாத்தியமா? 69 சதவிகித இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும்? அதில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு? மற்ற மாநிலங்களில் இவ்வாறு வழங்கப்பட்டால் அன்றிலிருந்து ஒரு வாரத்தில்தான் சட்டமா? சந்தேகங்களை யாராவது நிவர்த்தி செய்வார்களா?)

சென்னை:””கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுவழங்க ஒரு வாரத்தில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்,” என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாவது மாநாடு நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் அப்துல்ரகுமான் தலைமையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா விருதினை வழங்கினார். ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் ஒரு லட்சம் ரூபாய் பரிசினை கருணாநிதியிடம் வழங்கினார். சாகித்ய அகடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான், அப்துல் ரகுமான், மு.மேத்தா ஆகியோரையும், இஸ்லாமிய எழுத்தாளர்களையும் முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.

விழாவில் கலைஞருக்கு பட்டயம் வழங்கியபோது

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:எனக்கு வழங்கப்படும் பரிசை பொதுநல நோக்கோடு செலவிடுவது தான் நான் கடைபிடிக்கும் முறை. இங்கு எனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசை ஐந்தாக பிரிக்கப்பட்டு பொறியியல் கல்லுõரிகளில் படிக்கும் ஐந்து இஸ்லாமிய மாணவர்களுக்கு அவர்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப வழங்கப்படும்.

கர்நாடகாவிலும், கேரளாவிலும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என
கோரிக்கை விடப்பட்டது. கர்நாடகாவிலும், கேரளாவிலும் இடஒதுக்கீடு இன்னமும் நடைமுறைக்கு வரமுடியாமல் சட்ட சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தது. குறுக்குப் பாதையில் செல்லும் சிலர் தடுத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன்.கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். அதற்கான ஆணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும். ஆளுநரும் அதில் கையெழுத்திடுவார்.

சதாவதானி செங்குதம்பி பாவலர் பெயரில் தபால்தலை விரைவில் வெளியிடப்படும்.ஈராக்கில் உயிர்கொல்லி ஆயுதங்கள் இல்லை என நிரூபித்தால் தாக்குதல் நடத்தப்படாது என புஷ் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாததால் அங்கு பெரும் படுகொலை நடந்தது. சதாமை இழந்தோம். இஸ்லாமிய சமுதாயத்திற்கு என்றும் நாங்கள் தோழர்கள் தான்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் பேசுகையில், “”இந்தியாவில் 15 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் பொருளாதார அடிப்படையில், கல்வியில், சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். இஸ்லாமியம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு சமூக அமைப்பு. மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முஸ்லிம்களுக்கு குறிப்பாக கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என்றார். இஸ்லாம், முஸ்லிம்

நன்றி : தினமலர்

குறிப்பு : பேச்சோடு நின்றுவிடாமல் இதை செயல் வடிவாக்க தமிழக முஸ்லிம் அமைப்புக்களும் திமுக வோடு கூட்டணியில் உள்ள தமுமுக வும் கர்நாடகத்திலும் கேரளத்திலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளது என்பதை நிறுபித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து கலைஞர் கூறியதுபோல் ஒருவாரம் அல்ல ஒரு வருடத்திற்குள்ளாவது இந்த அவசர சட்டத்தை கொண்டு வர முயல்வார்களா? – முகவைத்தமிழன்

ஏப்ரல் 8, 2007

இஸ்லாமியருக்கு இதயத்தில் இடம் ஒதுக்கிய கலைஞர்!

இதயத்தில் இடம்

சாத்தன்குளம் அப்துல் ஜப்பார்

தேர்தலில் போட்டியிட இடம் கேட்ட ஒரு கட்சியிடம் ” உங்களுக்கு இதயத்தில் இடம் தருகிறேன்” என்று தமிழக முதல்வர் கலைஞர் கூறிய வரிகள் லோகப் பிரசித்தம். இப்போது, இட ஒதுக்கீடு விஷயத்தில், சிறுபான்மையினருக்கு, இது வரை, சட்டத்தில் இல்லாவிட்டாலும் இதயத்தில் இடம் கொடுத்து விட்டார் தமிழக முதல்வர் கலஞர். இதய நன்றியை அவருக்கு காணிக்கையாக்குவோம்.

இதில் ஆடப்பாட, குதிக்க, கும்மாளமிட இதுவரை எதுவும் இல்லை. ஏனெனில் இதில் பல விஷயங்கள் தொக்கி நிற்கின்றன. அவற்றுள் ‘எங்களுக்கு விருப்பம்தான் ஆனால் சட்டத்தில் இடமில்லையே’ என்று கைமலர்த்தி விடக்கூடிய வாய்ப்பும் ஒன்று. கலைஞர் கை விட மாட்டார் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை என்பது வேறு விஷயம். கலஞரின் கையையும் மீறிப் போய்விடக்கூடிய சூழல்களை சில சதிகார சக்திகள் உருவாக்கி விட முடியாது என்றில்லை. கலைஞரின் கையெழுத்தில் அது அடங்கும் என்றால் அதை என்றோ அவர் செய்திருப்பார். ஆனால் இது பல கட்டங்களைத் தாண்ட வேண்டியதிருக்கிறது. சுருங்கச் சொன்னால் இது ‘பூக்குழி’ பாய்ச்சல் அல்ல, நெருப்பாற்று நீச்சல். ஏனெனில், அரசியல் அமைப்புச் சட்டப்படி ஐம்பது சத விகித இட ஒதுக்கீடு தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் அது அறுபத்தி ஒன்பது விழுக்காடுகளாக உள்ளது. இதுவே இப்போது சர்ச்சைக்குரிய விஷயமாக சட்டத்தின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சட்டமியற்றும் சட்ட, நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதித்வ அவைகளின் உரிமகளில் நீதி மன்றங்கள் தலையிட முடியாது என்பது பலராலும் ஓங்கி ஒலிக்கப்படும் ஒரு வாதம். அப்படியல்ல எந்த ஒரு சட்டமும் நீதி மன்றங்களின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பது நீதி மன்றங்களின் எதிவாதம். இது ஒரு வகை அநாவைய குறுக்கீடு – JUDICIAL ACTIVISM – என்று மக்கள் பிரதிநிதிகள் சொல்ல, தவறுகள் நிகழாமல் தடுக்கும் ஓர் உத்தி என்று நீதித்துறை வட்டாரங்கள் வாதிடுகின்றன.

சட்டமியற்றல் – மக்கள் மன்றங்கள்.! அதனை நிறைவேற்றல் – நிவாகம் – அரசாண்மை.! தவறுகள் நேராமல் கண்காணிக்க தவறுகள் நடந்தால் கண்டிக்க நீதி பரிபாலனத்துறை.! இவற்றை கண்கொத்திப் பாம்பாக கண்ணில் எண்ணையை விட்டுக் கொண்டு கவனித்து அவற்றை மக்கள் கவனத்துக்குக் கொண்டுவரும் ஊடகத்துறை! இவைதான் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று கருதப்படுபவை. இவை ஒன்றுக்கு ஒன்று அனுசரணையாக இருக்க வேண்டுமே தவிற ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கக் கூடாது என்பது அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிகளின் எண்ணம். மக்களின் எதிர்பார்ப்பு. இவை இன்று அட்சர சுத்தமாக நிறைவேறுகிறதா, நிறைவேற்றப் படுகிறதா என்பது ‘கோன் பனேகா குரோர்பதி’யின் கடைசிக் கேள்வியை விட கடினமான கேள்வி.

உயர் கல்விகூடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு இருபத்திஏழு சத விகித ஒதுக்கீடு என்பதற்கு விதிக்கப் பட்டுள்ளது இடைக்காலத் தடைதான் என்றாலும் அது ஒரு முட்டுகட்டைதான். அதைத் தூக்கித் தூரப் போடுவதற்கு அரசு தோள் கொடுத்துதான் ஆக வேண்டும் அதற்கும் மற்றவர்களும் துணை நின்றுதான் ஆகவேண்டும்.

இது குறித்து தமிழக முதல்வர் கலஞர் மைய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். ஆகும் அத்தனையும் செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும் அதற்கு பதில் எழுதுகிறார்கள்.இந்த அக்கறையும் கரிசனமும் சிறுபான்மையினர் விஷயத்திலும் வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இருக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நிலையில் காஸியாபாதில் உள்ள ஒரு புகழ்பெற்ற மார்க்க கல்விக்கூடம் நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் நிகழ்வதாக உத்தர் பிரதேச உயர் நீதி மன்றத்தை அணுகுகிறது. அந்த நீதி மன்றம் முதலுக்கே மோசமாக, மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாக, “முஸ்லிம்கள் சிறுபன்ன்மையினர் அல்ல” என்று தீர்ப்பளிக்கிறது. இது ஏற்றுக் கொள்ளப்பட்டால் முஸ்லிம் சமூகம் உள்ள சில சலுகைகளையும் இழக்க நேரிடும். இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் வாழும் கேரளத்திலும் சரி, 24 சதவிகிதம் வாழும் மேற்கு வங்கத்திலும் சரி அவர்கள் சிறுபான்மையினர் என்றே கருதப்படுகின்றனர் ஆனால் 18 சதவிகித முஸ்ல்ம்கள் மட்டுமே வாழும் உத்தரப் பிரதேசத்தில் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்புத்தான் ஏகத்துக்கும் நெருடுகிறது.

ஆக, உள்ளதையே காப்பாற்றிக்கொள்ளப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம்கள் புதிதாக சலுகைகளைப் பெற்றுக்கொள்ள என்ன பாடு பட வேண்டியதிருக்குமோ என்கிற கவலை முஸ்லிம்களை பீடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

இட ஒதுக்கீடு பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்ட நீதியரசர் ஜனார்தனன், அதற்கு முன்பு ஆட்சிப்பணி அதிகாரி அம்பாசங்கர் ஆகியோ அளித்துள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவற்றுக்கு செயல் வடிவம் கொடுக்க ஆவன செய்யப்படுமென்று மக்கள் மன்றத்திலேயே கலஞர் உறுதி மொழி தந்திருக்கிறார்.

69 சதவிகிதம் தொடர்பான் தீர்ப்பு வந்த பிறகே இது சாத்தியம் என்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வால் ஆச்சரியத்துடன் நம் கண்களை அகல விரியச் செய்கிறதே தவிற நிம்மதியுடன் பெருமூச்சு விட வைக்கவில்லைல் என்பது இப்போதைக்கு ஓர் உண்மைதான். மத அடிப்படையில் ஒதுக்கீடு கூடாது என்று பா.ஜ.க. வும் சங் பரிவாரும் போடும் கூச்சல் வெளிப்படையான் ஒன்றுதான்.

ஆனால் ‘ஜகல்பாத்’ வேலைகளை வஞ்சக நெஞ்சத்துடன் செய்து இதன் பலன் முஸ்லிம்களுக்கு கிடைக்க விடாமல் செய்து விடும் உள்ளடி வேலைகள் நடந்துவிடாமல் கலஞர் கவனத்துடன் இருப்பர்ர் என்று இஸ்லாமிய சமூகம் நம்புகிறது இஸ்லாமிய சமூகத்துக்கு கலஞர் செய்யும் இந்தக் கைமாறு வானை முட்டி நிற்கும் வள்ளுவன் சிலைக்கும் உயரமான ஒரு கல்வெட்டாக காலமெல்லாம் உயர்ந்து நின்று கலஞரின் பெயர் சொல்லும் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திலிருந்து முற்றாக ஒதுக்கி விடாமல் அவர்களை முன்னுக்குக் கொண்டு வர இட ஒதுக்கீடு உதவும் என்பது நல்லோர் நம்பிக்கை. நம்பிக்கைகள் வீண் போனதில்லை. அது சரித்திரம்.

Create a free website or blog at WordPress.com.