தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 26, 2008

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா செய்திகள்

Filed under: அபூ ஆஃப்ரின், இஜ்திமா, துபை — முஸ்லிம் @ 9:52 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா நிகழ்ச்சியானது, 25.4.2008 வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை டேரா துபையில் உள்ள இந்தியன் இஸ்லாஹி சென்டரில் இனிதாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரர். அமீர் சுல்தான் அவர்கள் கிராஆத் ஓதினார். அதனை தொடர்ந்து சகோதரர். ஷிப்காத்துல்லாஹ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வின், சிறப்பு உரையினை சகோதரர். அப்துல் ஸலாம் மதனி (இயக்குனர் – அல் மனார் திருக்குர்ஆன் பயிற்சி மையம் – அல் கூஸ் – துபை) அவர்கள் நிகழ்த்தினார். அவரின் சிறப்பு உரையினை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மெளலவி. நூருல் அமீன் அவர்கள் நிகழ்த்தினார்.

ம.ரிப் தொழுகை முடிந்தவுடன் இரண்டாவது அமர்வானது துவங்கியது. துபை இந்தியன் இஸ்லாஹி சென்டரில் பணியாற்றும் கேரளாவைச்சார்ந்த மெளலவி. ஷிஹாப் எடக்கர அவர்கள் உரை நிகழ்த்தும் போது, சத்திய மார்க்கத்தினை எடுத்துரைக்கும் பணியினை துபாயில் இருக்கும் அனைத்து மாநில இஸ்லாமிய சகோதரர்களும் தத்தம் பணியினை திறம் பட செய்ய வேண்டும். இந்த பணியில் ஏற்படும் சிரமங்களையும், கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நாம் மேற்கொண்ட பணியில் தொய்வு இல்லாமல் செய்தால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் நமக்கு கூலி கிடைக்கும் என்பது போன்ற பல கருத்துக்களை, தமிழ் பேசக்கூடிய சகோதரர் புரிந்துக்கொள்ளும் விதத்தில் மலையாளம் கலந்த தமிழில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற அனைத்து சகோதரர்களின் உள்ளங்களிலும் ஒரு மாற்றத்தினை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்தக்கூடிய அளவில் இருந்தது அவருடைய உரைகள் கற்கள். அதனை தொடர்ந்து சகோதரர். நாஸர் அலி கான் அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ கொள்கையில் பற்றுள்ள அனைத்து சகோதர உள்ளங்களும் எந்த விதமான கருத்து பரிமாற்றங்களும் இல்லாமல் கலந்துக்கொண்டதினை காணும் போது, இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒற்றுமையானது ஏற்படும் என்பது திண்ணம். அல்லாஹ்வின் திருப்பொருத்ததை நாடி நடை பெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ் பிரிவு – துபை மிகச் சிறப்பாக செய்து இருந்தது. தமி்ழ் இஸ்லாமிய நி்கழ்ச்சியினை கேட்பதற்கு கேரளாவை சார்ந்த பல சகோதரர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

ஏப்ரல் 20, 2008

துபாயில் தொழிலாளர் பிரச்சினை தீர்க்கும் நடுவம் துவக்கம்

Filed under: அமீரகம், துபாய், துபை — முஸ்லிம் @ 2:04 பிப
தமிழ் முஸ்லிம் திரட்டி – TAMIL MUSLIM READER
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபாயில் அடிப்படை தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கும் அரசுத்துறை தொண்டு நிறுவனம் துவக்கம்

அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில், பல நாடுகளை சார்ந்த பல அடிப்படை தொழிலாளர்கள் சோனாப்பூர் என்ற பகுதியிலும் மற்றும் அல்கூஸ், ஜெபல் அலி போன்ற பகுதியிலும் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகப்படியாக கட்டுப்பானப்பணி புரிவதிலும், சாலை ஓரப்பணி புரிவதிலும், மற்றும் பல கடினமான பணிகளிலும் ஈடுப்படுகிறார்கள். இவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள நிறுவனங்கள் தான் (Contracting Companies). இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் போது குறைந்த சம்பளத்தினை தொழிலாளர்களுக்கு தருகிறார்கள். சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் அல்லது 14 மணி நேரங்கள் பணிபுரிகிறார்கள் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியமோ மிக மிக குறைவாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறைக்காலங்களிலும் வேலை செய்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலியினை தருகிறது. அத்துடன் தொழிலாளர்கள் தங்கக்கூடிய இடங்களும் அடிப்படை வசதி இல்லாத அளவிற்கும் மாறிக்கொண்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் செய்யும் இத்தகைய தவறுகளால் பல பிரச்சனைகளை இங்குள்ள தொழிலாளர்கள் தினம் தினம் சந்திக்க வேண்டி இருக்கிறது. சென்ற சில மாதங்களாக துபாய், அஜ்மான், ஷார்ஜா போன்ற பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அடிப்படை வசதி இல்லை, ஆறு மாத சம்பள பாக்கி, அறைகளில் மின்சாரம் இல்லை, தங்கி இருக்கும் பகுதிகளில் சரியான தண்ணீர் வசதி இல்லை மற்றும் இன்னும் பல காரணங்களை காட்டி சாலைகளில் இறங்கி போராட்டங்களை செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர்களை அவர்களின் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பி விட்டது துபாய் அரசாங்கம்.

அடிப்படை தொழிலாளர்கள் இல்லை என்றால், துபாயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி விடும் என்பதினை கருத்தில் கொண்ட துபாய் அரசாங்கமானது, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டி சோனாப்பூர் பேருந்து நிலைய பகுதியில் நிரந்தரமாக தொழிலாளர்கள் குறை தீர்க்கும் தொண்டு நிறுவனம் ஒன்றினை (Permanent Committee for Labour Affairs (PCLA) 18.4.08 வெள்ளிக்கிழமை மாலை அன்று பல தொழிலாளர்கள் முன்னிலையில் துவங்கியது. இந்நிகழ;ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மேஜர் ஜெனரல் முஹம்மது அஹமது அல் மாரி அவர்கள் (Major – General Mohammed Ahmed Al Marri – Director of the Dubai Naturalisation and Residency Department and Chairman of PCLA) அவர்கள் கூறுகையில், தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை எற்பட்டாலும் எங்களிடம் முறையிடலாம், வேலை நேரம் அதிகம் நிறுவனங்கள் தருகிறது, சம்பள பாக்கி, அடிப்படை வசதி குறைவு இது போல் என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து அந்தந்த துறைச்சார்ந்தவர்களிடம் (Relevant Department) கூறுவோம். ஒரு மணி நேரத்துக்குள் தொழிலாளர்களின் பிரச்சனை சரிப்படுத்த எங்களின் இந்த நிறுவனமானது முயற்சியினை மேற்கொள்ளும். தொழிலாளர்களின் வசதியினை கருத்தில் கொண்டு மாலை நேரத்திலும் எங்கள் தொண்டு நிறுவனம் பணி செய்யும். அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி அந்த நிறுவன அதிகாரிகளை சந்தித்து குறை சொல்வது போன்றவைகளை பற்றியும், கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை அடிப்படை தொழிலாளர்களுக்கு கற்றும் தரும் பணியிலும் இந்த நிறுவனமானது செயல்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தற்போது சோனாப்பூரில் துவங்கி இருக்கிறோம் அதன் பின் ஜெபல் அலி, அல் கூஸ் போன்ற பகுதியிலும் மிக விரைவில் துவங்க உள்ளோம் என்றும் சொன்னார்.

இந்த துவக்க நிகழ்ச்சியில் இலங்கை, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சார்ந்த அரசுத்துறை (Government Diplomats) அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பாகிஸ்தான் தூதரகத்தினை சார்ந்த முஹம்மது வாஷின் (Mohammed Waseen – Welfare Consul at the Pakistani consulate in Dubai) அவர்கள் குறிப்பிடுகையில், இந்த நிறுவனமானது தொழிலாளர்களின் அடிப்படை வசதிக்காகவும், மற்றும் மகிழ்வுடன் தொழிலாளர்கள் துபாயில் இருப்பதற்கான அனைத்து வசதி வாய்ப்பினை தரும் என்றும் கூறினார்.

நன்றி : கலீஜ் டைம்ஸ் 19.4.2008 முதல் பக்க செய்தி

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

மார்ச் 17, 2008

துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை

Filed under: துபை, ஹிதாயத் — முஸ்லிம் @ 7:24 பிப

துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை

துபாய் புளு ஸ்கை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அப்பாஸ் ஷேக் ( வயது சுமார் 21 ) 16.03.2008 ஞாயிறன்று பிற ஊழியர்கள் பணிக்குச் சென்ற நேரத்தில் பேனில் கயிறை மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

எக்ககுடியைச் சேர்ந்த இவர்களது குடும்பம் தற்பொழுது முதுகுளத்தூரில் வசித்து வருகின்றனர்.

தனது மகன் துபாய் சென்று குடும்பத்திற்கு உதவியாக இருப்பான் என நினைத்த இவரது குடும்பத்தினருக்கு ஷேக்கின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக்கிற்கு தகப்பனார், தாய், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் இருக்கின்றனர்.

பிற ஊழியர்கள் பகலில் பணிக்குச் சென்று திரும்பி விட்டு அறைக் கதவைத் திறந்ததும் ஷேக் தூக்கில் தொங்கியது கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

துபாய் காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக இந்திய தூதரக அலுவலகங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இந்தியர் தற்கொலை விகிதம் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி அதிகரித்து வருவது அதிர்ச்சியலைகளை இந்திய சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்

பிப்ரவரி 10, 2008

துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்

Filed under: உதவி, துபை — முஸ்லிம் @ 7:56 பிப
துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலிஃபுல்லாஹ் முஹம்மது ஜியாவுதீன் ( வயது 38 ) . தற்பொழுது சீர்காழி அருகேயுள்ள காத்திருப்பு என்னும் ஊரில் வசித்து வருபவர். வளைகுடா கனவுகளுடன் கடந்த 09.12.2006 அன்று அபுதாபியில் உள்ள லீடர்ஸ் டெக்கர் எனும் நிறுவனத்தில் பணிக்காக சுமார் ஒரு லட்சம் செலவு செய்து வருகை புரிந்தார். லெபனானைச் சேர்ந்தவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். இரண்டரை மாதம் கழித்து அந்நிறுவன உரிமையாளர் உன்னை இந்தியாவுக்கு அனுப்பப் போகிறேன் என்றதும் அந்நிறுவனத்தை விட்டுவிட்டு துபாய் மெட்ரோ ரெயில் திட்டத்தில் சப் காண்டிராக்டரிடம் பணிபுரிந்துள்ளார்.


28.12.2007 அன்று ஜடாஃப் எனும் இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கம்பியின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார். கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகடு வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்பொழுது நடக்க முடியாத சூழ்நிலையில் தாயகம் செல்லவேண்டும் என்ற சூழலில் பாஸ்போர்ட் அவரிடம் இல்லாத காரணத்தால் அதற்கும் வழியில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இவருக்கு யாரேனும் உதவ முன்வருவார்களா ? என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஜியாவுதீன்.

இவரது தொடர்பு எண் (00971) 050 9044240.

செய்தி: முதுவை ஹிதாயத்

ஒக்ரோபர் 5, 2007

துபாய் ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

Filed under: இஃப்தார், ஈமான், துபை — முஸ்லிம் @ 9:49 பிப
துபாய் ஈமான் நோன்பு திறப்பு சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர்



துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு சார்பில் வருடந்தோறும் ரமலான் முழுவதும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அமீரகத்தில் தமிழக நோன்புக் கஞ்சியை வழங்கி வருவதே இதன் சிறப்பம்சம். தினந்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிகு நிகழ்ச்சியை அறிந்த துபாய் இந்திய துணைத்தூதரகத்தின் கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி தானும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆவலாய் இருப்பதை தெரிவித்தார்.

இதனையடுத்து ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வியாழன் மாலை வருகை புரிந்த கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி , கன்சல் திருமிகு பி.எஸ். முபாரக் ஆகியோரை ஈமான் அமைப்பின் கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் தலைமையில் துணைத்தலைவர்கள் அல்ஹாஜ் அஹமது முகைதீன் , அல்ஹாஜ் அப்துல் கத்தீம் , அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் , பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி , பொருளாளர் மீரான் முஹைதீன் , கல்விக்குழுச் செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா , மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் , விழாக்குழுச் செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் , ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் , ஜமாஅத ஒருங்கிணைப்பாளர் கீழை ஹமீது யாசின் , சுவாமிமலை முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

நோன்புக் கஞ்சியை அருந்தி மகிழ்ந்த கன்சல் ஜெனரல் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சியை தயாரித்து வழங்கும் குழுவினரைப் பாராட்டினார். ஈமான் அமைப்பு செய்து வரும் சமுதாயப் பணிகள் சிறப்புற வாழ்த்தினார்.

செய்தி : முதுவை ஹிதாயத்

செப்ரெம்பர் 29, 2007

துபாயில் JMC முப்பெரும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

Filed under: செய்திகள், துபாய், துபை, முதுவை ஹிதாயத் — முஸ்லிம் @ 11:04 பிப
துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க முப்பெரும் விழா

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக முஹம்மது அனஸ் இறைவசனங்களை ஓதினார். பரீஜ் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் மன்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மன்ற அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ‘துபாய் பிளாக்’ என இரண்டு விடுதிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். வருடந்தோறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது கல்லூரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி வருவதாகத் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான முனைவர் எம்.எம். ஷாகுல் ஹமீது தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரிக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு தாய், மகன் பாசப்பிணைப்பைப் போன்றது என்றார். தாயகம் வரும் ஒவ்வொரு வரும் தனது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல் கல்லூரிக்கு வருகை தர கேட்டுக் கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஷேக் முஹம்மது கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு படிப்புகள், கேம்பஸ் இண்டர்வியூ, வருடந்தோறும் ஆகஸ்ட் 15 அன்று நடத்தப்பட்டு வரும் முன்னாள் மாணவர் மன்ற விழா, கல்லூரியில் பள்ளிவாசல் விடுதிக்கட்டிடத்திற்கு உதவிய ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் மேலும் பல்வேறு வழிகளில் கல்லூரிக்கு உதவி வரும் ஈடிஏ டி என் எஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் அல்ஹாஜ் நூருல் ஹக், HRM ED அல்ஹாஜ் எம். அக்பர் கான் உள்ளிட்ட பலரை நினைவு கூர்ந்தார்.

கல்லூரி தாளாளர் அல்ஹாஜ் எம்.ஜே. அப்துல் கபூர் சாஹிப் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி வரும் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி பொருளாளர் அல்ஹாஜ் கே.ஏ. கலீல் அஹமது சாஹிப், பேராசிரியர் கலந்தர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து தனது நிறுவனங்களுக்கு கல்லூரி மாணவர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தை அறிவித்தார்.முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.

துபாயில் ‘இறைவாக்கும் நபிவாழ்வும்’ நூல் வெளியீட்டு விழா

துபாய் ஏகத்துவ மெய்ஞானசபையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் எழுதிய ‘இறைவாக்கும் நபிவாழ்வும்‘ எனும் நூல் வெளியீட்டு விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜெ. முஹம்மது இக்பால் விழாவிற்கு தலைமை வகித்து, நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். பெருங்கவிக்கோ அவர்கள் சகொதர சமுதாய மக்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் கொண்டுள்ள அன்பை, நட்பை விவரித்தார். அவர்களின் தமிழ்ப்பணி குறித்து விவரித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் இஸ்லாமிய தமிழ் ஞான சிறப்பு மற்றும் இஸ்லாமியர்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்தும், தனது தமிழ்ப் பணிக்கு அவர்கள் கொடுத்து வரும் அபரிமிதமான ஒத்துழைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் மெய்ஞான சபை ஞானக்கடல் இமாம் கலீல் அவ்ன் மெளலானா அவர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் விவரித்தார்.

சபையின் கவிஞர்கள் பெருங்கவிக்கோவின் சேவைகளை பாராட்டிப் பேசினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.ஜே. அப்துல் ரவூப், இம்தியாஸ் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.