தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

பிப்ரவரி 17, 2007

சென்னை ஏர்போர்ட் கிரைம்ஸ் உஷார்!!

சென்னை:கோவையில் இருந்து வந்து டில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் தங்கியிருந்தவரிடம் ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்த விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், விமான நிலைய அதிகாரிகள் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் “பிக்பாக்கெட்’டுகள் உலாவுவது போல சென்னை விமான நிலையத்திலும் தற்போது திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக துபாய், லண்டன் ஆகிய இடங்களில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை குறி வைத்து கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருடு போன பொருட்களும் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நடிகை கஸ்துõரியின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, ரொக்கம் ஆகியவை கொண்ட கைப்பை மாயமானது. இது தொடர்பாகவும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தின் அங்கீகரிக்கப்பட்ட தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஒரு பயணியின் ரூ.60 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). இவர் டில்லி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். டில்லி செல்லும் கடைசி விமானமும் சென்றுவிட்டதால், விமான நிலையத்தில் பயணிகள் தங்குவதற்காக “லிங்க் பில்டிங்’கில் அமைக்கப்பட்டுள்ள தங்கும் அறையில் தங்கினார். அங்கு தனது உடமைகளை வைத்துவிட்டு, அறையை பூட்டிக் கொண்டு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார்.பின்னர் திரும்ப வந்து பார்த்த போது அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைத்திருந்த சூட்கேசும் திறக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விமான நிலைய மேலாளர் ஸ்ரீவத்சவாவிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரை விமான நிலைய போலீசாருக்கு மேலாளர் பரிந்துரை செய்து அனுப்பினார். புகாரை பெற்ற விமான நிலைய போலீசார் விசாரணை நடத்துவதற்காக விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கும் “லிங்க் பில்டிங்’ பயணிகள் தங்கும் விடுதிக்கு சென்றனர்.

ஆனால், விமான நிலையத்திற்குள் போலீசார் நுழைந்து, திருட்டு சம்பவம் குறித்து விசாரிக்கக் கூடாது என்று சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, இது குறித்து அந்த ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். மீறி போலீசார் உள்ளே நுழைந்து விசாரணை நடத்தினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனர். இதையடுத்து, விமான நிலைய ஆணையத்தின் சார்பில் விமான நிலைய போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டது. பணம் திருடு போனதாக விமான நிலைய மேலாளரிடம் புகார் கொடுத்த ராமகிருஷ்ணன் நேற்று காலை புறப்பட்ட விமானத்தில் டில்லி சென்று விட்டார். அவர் வந்த பின்னர் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரிக்க விமான நிலைய அதிகாரிகளும், ஊழியர்களும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பலர் சிக்குகின்றனர்!:துபாய், லண்டன் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரும் பயணிகளின் பெட்டிகளை உடைத்து, அவற்றில் உள்ள நகை, ரொக்கம், விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை திருடும் கும்பல் ஒன்று சமீபத்தில் சிக்கியது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுபோல பலர் விமான நிலையத்தில் உள்ளே நடமாடிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வகையில் லண்டனில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரின் மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிய ஒரு கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் சென்னை விமான நிலையத்தில் நடமாடும் அனைத்து திருடர்களும் சிக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thanks :

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.