தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 18, 2007

செய்திகள் – நீதியைத்தேடி கருத்தரங்கம்

கோவை குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்: முன்னாள் நீதிபதி

கோவை மார்ச்-11 “நீதியைத் தேடி” கருத்தரங்கின் புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கு சொடக்கவும் :

புகைப்படத் தொகுப்பு – 1

புகைப்படத் தொகுப்பு – 2

முகப்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு

கோவை, மார்ச் 12: இந்திய தண்டனைச் சட்டத்தில் விசாரிக்கப்படும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களுக்கு 9 ஆண்டுகளாக ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ் தெரிவித்தார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பில், 9 ஆண்டுகளாக தமிழக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் நீதியைத் தேடி கருத்தரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி

கருத்தரங்கில் அவர் பேசியது:

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

ஆனால், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீவிரவாதச் சட்டத்தில் கைதானவரர்களுக்கு விசாரணையின்போதே ஜாமீன் வழங்கப்பட்டது.

கோவை தொடர் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்.

அரங்கினுல் கூடிய பென்கள் கூட்டம்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தவணை முறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளனர் என்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலர் கே.ஜி.கண்ணபிரான்: சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்தை பாரபட்சமாகச் செயல்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

கேரள மாநில மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.பலராமன்: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி கேரளம் வருவதற்கு தமிழக அரசு 2003-ல் விதித்த தடையை நீக்க வேண்டும்.

அவரது உடல் நிலையை கருதி அவருக்கு சிகிச்சை அளிக்க ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அவர் மீதுள்ள பிற வழக்குகளை விரைந்து முடிக்க கேரள நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.

ஆனால், அவரை கோவையிலிருந்து கேரளம் அழைத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ப.பா.மோகன் வரவேற்றார். முஸ்லிம் சிறைவாசியின் குடும்ப நிலையைச் சித்தரிக்கும் குறுந்தகட்டை தமிழக, புதுவை கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.திருமலைராஜன் வெளியிட்டார்.

தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, பியுசிஎல் மாவட்டச் செயலர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்குக் கூட தண்டனைக் குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கூட வழங்குவதில்லை. எனவே, 9 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந்துகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகள் : நன்றி தினமனி

காரைக்குடி, இஸ்லாம் , முஸ்லிம்

Create a free website or blog at WordPress.com.