தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 5, 2008

இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!

Filed under: இட ஒதுக்கீடு, reservation — முஸ்லிம் @ 11:36 முப
கருணாநிதி (அன்கோ) வின் இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!

30.05.2008 அன்று மீண்டும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார். முன்பு அறிவித்த இட ஒதுக்கீட்டின் அர்த்தம் என்ன? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆய்வு செய்ய 9 பேர் அடங்கிய ஜனார்த்தன கமிட்டியில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லாதது கருணாநிதியின் சாதனை. கமிட்டியில் கூட இட ஒதுக்கீடு வழங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கலைஞர் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அம்பாசமுத்திர கமிட்டி அறிக்கையை தூசு தட்டி முஸ்லிம்கள் ஓட்டுக்களை அறுவடை செய்ய அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது தான் சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு.

6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கமிட்டியை தள்ளுபடி செய்து, இன்றைய முஸ்லிம்களின் மக்கள் தொகை, கல்வி, பொருளாதாரம், இட ஒதுக்கீடு நிலையை ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 4 சதவீதம் முறையாக அங்கு கொடுக்கப்பட்டது. (கவனத்தில் கொள்க) 2 லட்சத்து 81 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்பட்டதாக டாக்டர் கலைஞரின் அரசு விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. அதில் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் என்றால் தலா கிருஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் 10,500 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். கிடைத்திருப்பதோ 0.5 சதவீதம் கூட இல்லை. மேலும் சில உயர் பணியிடங்களுக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிப்பதற்கு கூட தகுதி இல்லாத நிலை உருவாகி விட்டது.

சிறுபான்மையினர் பாதுகாவலர், சமூக நீதி காத்தவர் என்று ஏற்றி போற்றி பாடப்படும் கருணாநிதியோ அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு என்று சாக்கு போக்கு சொல்கிறார். சட்ட மன்றத்தில் சிறுபான்மை சமூகத்தினர் இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருக்கிறது என்று இரட்டை நாக்கை சுழற்றினார். அரசு அதிகாரிகளோ! கிருஸ்துவர்கள் 14வது இடத்திலும், முஸ்லிம்கள் 28வது இடத்திலும் (ரோஸ்ட்டர்) சுழற்சி முறையில் இருக்கிறார்கள், அரசு ஆணைப்படி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முழுமையாக கிடைக்க வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகள் நீங்கள் பொருத்து இருக்க வேண்டும் என்கின்றனர். அப்படி பொறுத்திருந்தால் வயது வரம்பு கடந்து பணிக்கு சேரும் தகுதியை நம் சமுதாய இளைஞர்கள் இழந்து விடுவார்கள். இந்த இட ஒதுக்கீட்டால் எந்த நம்மையும் இல்லாமல் போய்விட்டது. முன்பு 3.2 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடிம், சட்ட சிக்கலும் இல்லாமல் முஸ்லிம்கள் சில இடங்களைப் பெற்றார்கள். அந்த நிலை இன்று கருணாநிதி அரசால் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது.

அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியும், அன்பழகனும், நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இட ஒதுக்கீடு குளறுபடிகள் சரி செய்யப்படும் என்றனர். சரி செய்யப்படாத நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தது. ஒரு தலைமுறையே பாதிக்கின்ற மிகப் பெரும் கொடுமை 3.5 சதவீத உள் இட ஒதுக்கீடு. எங்களின் விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், சட்ட சிக்கல்கள், குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கிருஸ்த்துவ, இஸ்லாமிய அமைப்புகளும், இந்திய தேசிய மக்கள் கட்சியும் 30.05.2008 அன்று சென்னையில் மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அவசர அவசரமாக கருணாநிதி (அன்கோ) கூடி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முறையாக மீண்டும் அமல்படுத்தப்படும் என்றனர். இன்று 3 லட்சம் பணி இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. முஸ்லிம்களுக்கு அதில் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. இனி முறையாக அமல்படுத்த கலைஞர் அன்கோ ஆணை பிறப்பித்து இருக்கிறது. குதிரை போன பிறகு லாடத்தை தேடும் நிலையில் அரசு ஈடுபட்டு இருக்கிறது. நன்றி பாராட்டி விழா நடத்தியவர்கள், ரகசியமாகச் சென்று துண்டு போட்டு சிறை நிரப்பு போராட்டத்தின் வெற்றி என வெற்று அறிக்கை விட்டவர்கள் இட ஒதுக்கீட்டு துரோகத்தை வரலாற்று சாதனை என்று கூனி குறுகி கூன்பிறையாய் கொக்கரித்தவர்கள், சுனாமியை விட பயங்கரமான ஒரு தலைமுறையையே பாதிக்கும் துரோகத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இதயத்தை இரும்பாகப் பெற்றவர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். இளைஞர்களே! சிந்தியுங்கள்!!.

தவிட்டைத் தங்கம் என்று சொன்னால் பாராட்டுவதா? குப்பையை குண்டு மல்லி என்று சொன்னால் குதித்து ஆடுவதா? அறிவைத் தொலைத்து விட்டு அறுப்பதற்கு ஆடுகள் என்று தலையை நீட்டுவதா?? மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி சுயநலத்திற்கு சமுதாயத்தை அடகு வைக்கும் தலைவர்களை (மன்னிக்கவும்) தலைவலிகளை, ஆம்! சமுதாய ஏஜென்டுகளை, கடல் செத்த மீன்களை ஒதுக்கி விடுவது போன்று அவர்களை ஒதுக்கி விட்டு அரசியலில் இந்திய தேசிய மக்கள் கட்சியில் ஒற்றுமையை உறுதிப்படுத்தி நம் இட ஒதுக்கீட்டை நாமே தீர்மானிக்க இணைவீர், இன்றே தொடர்பு கொள்வீர்.

இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369

WWW.IDMK.ORG

ஜனவரி 28, 2008

தமிழக பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு

Filed under: இட ஒதுக்கீடு, reservation — முஸ்லிம் @ 7:09 முப

ஆரம்ப பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்திற்கு நான்காமிடம்

புதுடில்லி: இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13 சதவீதம் இருந்தும், ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 9.39 சதவீதம் மட்டுமே முஸ்லிம் மதத்தினராக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம்கள் வெறும் 7.52 சதவீதம் பேர் மட்டுமே. பள்ளிகளில் முஸ்லிம்கள் சேர்க்கப்படுவது குறித்து தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைகழகம், முதல் முறையாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உ.பி., பீகார், மேற்கு வங்கம், கேரளா, போன்ற மாநிலங்களில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இம்மாநிலங்களில், முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் பள்ளிகளில் அவர்களின் சேர்க்கைக்கும், பெரியளவில் வித்தியாசம் உள்ளது. அசாம், காஷ்மீர், ஆந்திராவில் நிலைமை சற்று தேவலை.

சில மாநிலங்களில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவரில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், இந்த புள்ளி விவரங்களில், சற்று தவறு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சில பள்ளிகளில் முஸ்லிம்கள் இனம் பிரித்து சேர்க்கப்படுவது இல்லை. அடுத்த ஆண்டு ஆய்வின் போது, இது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆய்வின் படி, காஷ்மீரில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 66.97 சதவீதம். நடுநிலை வகுப்புகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 60.50 சதவீதம். அசாமில், முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிப்பதால், அங்கும் மாணவர் சேர்க்கை 30.92 சதவீதமாக உள்ளது. ஆந்திராவில் ஆரம்பப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 9.17 சதவீதம். நடுநிலைப் பள்ளிகளில் இது 9.11 சதவீதமாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 25 சதவீதமாக இருந்த போதிலும், ஆரம்பப்பள்ளிகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 27.92 சதவீதமாக உள்ளது. கேரளாவில், முஸ்லிம் மக்கள் தொகை 24.7 சதவீதம், ஆனால், முஸ்லிம் மாணவர் சேர்க்கையில் ஆரம்பப்பள்ளியில் 10.13 சதவீதமும், நடுநிலைப்பள்ளிகளில் 9.59 சதவீதமாகவும் உள்ளது. இந்த ஆய்வில், முந்தைய ஆண்டுகளை விட ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர்களின் மாணவர் சேர்க்கை பெரியளவில் வித்தியாசப்படவில்லை. பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆரம்பக்கல்வி மற்றும் நடுநிலைக் கல்வி வகுப்புகளில், தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில், கல்வி மேம்பாட்டு புள்ளி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கேரளாவே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் இரண்டு புள்ளிகள் பின்தங்கினாலும், இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த டில்லி, மேலும் ஓரிடம் தாண்டி, மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது.

கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆந்திரா நான்கு இடங்கள் பின்தங்கி, எட்டாவது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவும் கூட ஆறாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்துக்கு பின்தங்கி உள்ளது.

நன்றி : தினமலர்

தமிழக முஸ்லிம் இயக்கங்கள் உடனடி கள நடவடிக்கையில் இரங்கி, ஊர் தோறும் முஸ்லிம் மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒக்ரோபர் 23, 2007

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் கேள்விக்குறியே – கலைஞர்

Filed under: இட ஒதுக்கீடு, reservation — முஸ்லிம் @ 3:40 முப
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் முழுமையான கட்டத்தை தாண்டிவிடவில்லை :சொல்கிறார் முதல்வர்

சென்னை : “சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு சட்டம் இன்னும் முழுமையான கட்டத்தை தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்துவிட முடியாது’ என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியனார்.

முதல்வர் பேசியதாவது: நெடுநாள் எதிர்பார்ப்பில் இருந்து பெரிய பரிசை பெற்ற மகிழ்ச்சியில் கட்சித் தலைவர்கள் இங்கு பேசினர். நன்றியை எதிர்பார்த்து இந்த நிலையை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிக்கு ஜனநாயக ஒப்புதலை தற்போது பெற்றுள்ளோம். எதிர்ப்பில்லாமல் எந்த நல்ல காரியமும் நடைபெறவில்லை என்பது வரலாறு. 50, 60 ஆண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது இந்த சமூக நீதிக்கான வித்து ஊன்றப்பட்டது. புறக்கணிக்கப்பட்ட மக்கள், படிப்பறிவு தேவையில்லை என்று மிரட்டப்பட்ட மக்கள் சார்பாக எழுந்த குரல் வலுவாகி, நடேசனார், நாயர் போன்றவர்களின் போர் முழக்கங்கள் காரணமாக எழுந்த உணர்ச்சிகளின் விளைவு தான் தற்போது சட்டசபையில் பூத்துக் குலுங்கி பூரிப்பு கொள்ளச் செய்துள்ளது. இடையில் எத்தனையோ சோதனைகள், வேதனைகளை சந்திக்க நேரிட்டது. இன்னும் அந்த கட்டத்தில் இருந்து முழுமையாக தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை நமது உரிமை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்து விட முடியாது. எனவே, இந்த சட்டம் இன்னும் முழுமை பெற்று விடவில்லை. சிறுபான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறி விடவில்லை. இன்னும் நிறைவேற்ற முன்வரவில்லை என்ற சலிப்புகள் நாட்டில் உள்ளன. நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதற்காக துணிந்து இந்த அரசு, சட்டமசோதாவை தற்போது கொண்டு வந்துள்ளது.

சட்டசபையின் வரலாற்றில் இது ஒரு பொன் நாள்: சமூக நீதிக்கான வரலாற்றில் புரட்சிகரமான நாள். இந்த சமுதாயம் எழுந்து நடமாட முடியுமா?, அப்படியே முயற்சித்து அடியெடுத்து வைத்தாலும் ஆயிரம் தடைகள், குறுக்கீடுகள் வந்து இந்த சமூகம் அடிமைப்பட்டு கிடந்தது. அவர்களது உணர்வுகளை தட்டி எழுப்பிய தலைவர்கள் தற்போது கல்லறைகளில் உள்ளனர். அந்த தலைவர்களின் கல்லறை உள்ள திக்கு நோக்கி நன்றி தெரிவிப்போம். இந்த பயனை அடைய நீந்தி வந்த காட்டாறுகள் எவ்வளவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். விளைந்த நெல்லை களத்தில் காண உழுதவனுக்கு உழைத்தவனுக்கு ஆசை இருக்கும். அவர்களது பிரதிநிதிகளாக நாம் இருப்பதால் தான் கஷ்டம் தெரிகிறது. இதற்காக சிந்திய வியர்வை, கொட்டிய ரத்தம் சாதாரணமானதல்ல. இந்த வெற்றியை நீதிமன்றங்கள், வீதிமன்றங்களில் எடுத்துச் சொன்னதால் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வருங்காலத்தில் வருவோர் எதுவும் செய்வதற்கு விட்டு வைக்காமல் நானே செய்து வருவதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இன்னும் செய்வதற்கு ஏராளமாக உள்ளது. சிலையை செதுக்கி, தயாரித்து, அதை பீடத்தில் வைத்து விட்டாலும் சிற்பி கடைசியாக அந்த சிலையின் கண்ணை திறப்பது தான் முக்கியமானது. இன்னும் தமிழகத்தில் அந்த கண் திறக்கப்படவில்லை. சிலை முழுமை பெற நாம் அனைவரும் பாடுபட்டு உழைப்போம். சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட சபதம் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

நன்றிங்க.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.