தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 12, 2007

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (PART-2)

“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். அதில் தஞ்சை முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு வேண்டுமென்றே துவேஷக் கருத்துகள் இந்துத்துவ வாதிகளால் விதைக்கப்படுகின்றன எனக் கண்டோம். அடுத்து, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான காழ்ப்புக் கருத்துக்களைக் காண்போம். முதலில் அவர் வடிக்கும் முதலைக்கண்ணீர்.

காவியச் சுவை மிக்க கம்ப ராமாயணத்தை இயற்றிய கவிஞர் கம்பரின் சொந்த ஊர்தான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேரெழுந்தூர். அங்கு கம்பர் வாழ்ந்திருந்ததாக நம்பப்படும் கம்பர் மேடு இன்று வெறும் குப்பை மேடாகக் கிடக்கிறது. அங்கு கம்பர் நினைவாகக் கட்டப்பட்ட மண்டபம் படுத்துத் தூங்குவோர் பயன்படுத்தும் இடமாக மாறிப் போனது. திருமங்கை ஆழ்வார்
தனது சுவைமிக்கதமிழ்ப் பாசுரங்களால் மங்களா சாசனம் செய்த வைணவத் திருக்கோயில்களையும் பெற்றிருக்கும் பெருமை உள்ளதுதான் தேரெழுந்தூர். இவையாவும் இன்று சோபையிழந்து மங்கிக் கிடக்கின்றன.

அதே சமயம், அந்தச் சிற்றூரில் பிரமாண்டமாகப் பல மசூதிகள் வானளாவ எழும்பிநிற்கக் காண்கிறோம். கம்பர் நினைவு மண்டபத்தின் அருகிலேயே புதுக் கருக்கு அழியாத
பள்ளிவாசலைக் காணலாம்! அரபு மொழி கற்பிக்கும் மதரசா ஒன்றும் தேரெழுந்தூரில் ஆலயங்களுக்கு அருகிலேயே நிறுவப்பட்டுள்ளது என்கிறார்கள். தஞ்சை மாவட்டம் தனது பாரம்பரியமான பண்பாட்டை இழந்து வருகிறது என்பதற்கு இதுபோல் பல ஆதாரங்களைக் காட்ட முடியும்

கம்பரின் நினைவிடம் சிலருக்குத் தூங்கும் இடமாக ஆனதற்கு மட்டும் கவலைப்பட்டிருந்தால் ஓரளவு நியாயமிருக்கும். ஆனால், பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கும் சேர்த்து பிதற்றி இருப்பது, அவருக்கு கம்பரின் நினைவிடத்தின் மீதான அக்கரையை விட முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான காழ்ப்புணர்வே மிகுந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

பாப்ரி மஸ்ஜிதை வன்முறையாக இடித்துத் தரைமட்டமாக்கி ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டது போன்று, முஸ்லிம்கள் ஒன்றும் கம்பர் நினைவிடத்தை இடித்து பள்ளிவாசல் கட்டிக் கொள்ள வில்லையே! கம்பர் ‘பிறந்ததாக நம்பப்படும்’ ஊரிலுள்ள கட்டிடத்தை ஏற்றுக் கொண்ட மலர்மன்னனால், அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்து இன்றும் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு வழிபாட்டுக் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டால் ஏன் உறுத்துகிறது? தேரெழுந்தூரில் பிறந்த கம்பருக்குத் தேரெழுந்தூரிலேயே கட்டிடம் இருக்கும் போது, தேரெழுந்தூர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் சென்றா பள்ளிவாசல் கட்டிக் கொள்வார்கள்?

தஞ்சை மாவட்டம் தனது பாரம்பரிய பண்பாட்டை இழந்து வருவதாக ஊளையிடும் மலர் மன்னன், தஞ்சையில் சோபையிழந்து புதர்க்காடுகளாகியுள்ள சைவக் கோவில்கள் பற்றிக் கவலைப்படாதது ஏன்? தஞ்சை பெரிய கோவிலில் காலடியெடுத்து வைக்கும் ஆட்சியாளர்களின் பதவிக்கும் உயிருக்கும் ஆபத்து வரும் என்ற ஐதீகம் ஆயிரம் ஆண்டுகளாக நிலவுகிறதே, அது பற்றியும் கவலைப் பட்டிருக்கலாமே? கலியுகக் கோவில் காவலர்களாக அவதாரமெடுத்துள்ள அத்வானியையோ, வாஜ்பாயையோ ஒரேயொரு முறையேனும் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு அழைத்து முதல் மரியாதை செய்து அனுப்பி இருக்கலாமே?

சோழ மன்னர்களின் வாரிசுகளுக்குப் பூரணகும்ப முதல்மரியாதை செய்யப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவில், இன்று தீட்சிதர்களின் ஆதிக்கத்தால் தமிழில் ஆராதனை மறுக்கப்பட்டுள்ளதே! அது பற்றியும் கொஞ்சமாவது கவலைப் பட்டிருக்கலாமே?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்திருக்க வேண்டிய சங்கரமடத்தை, காஞ்சிக்குக் கடத்திச் சென்றார்களே! தஞ்சை மாவட்டத்தில் பிறந்த சங்கராச்சாரியார் சுப்ரமணியன் அவர்களிடம் எடுத்துச் சொல்லி, சங்கரமடம் மீண்டும் கும்பகோணத்திற்கே திரும்ப வரச் செய்யவும் கொஞ்சம் கவலைப் பட்டிருக்கலாமே? தொடரும் பித்தலாட்டம் நிறைந்த அவரது நீலிக்கண்ணீரைப் பாருங்கள்..

மக்கா, மதீனாவிலேயே சிறு தெய்வ வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. முகமதியம் தனது செல்வாக்கு பெருகும்வரை பொறுமையாக அதனைச் சகித்துக் கொண்டிருந்து விட்டு, தனது
ஆதிக்கம் ஸ்திரப்பட்டவுடன் சிறிதும் தயை தாட்சண்யம் இன்றி அரேபியரின் பாரம்பரிய தெய்வ நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் அழித்து ஒழித்தது..

பாகன்களுக்கும் முந்தைய இஸ்லாமியப் பாரம்பரிய பண்பாடு, மக்கா-மதினாவில் இடைப்பட்ட காலகட்டத்தில் தோன்றிய பாகன்களால் அழிக்கப்பட்டதைக் கண்டு கொள்ளாமல் போனதற்கு, அவருக்கு இஸ்லாமிய வரலாறு தெரியாதது காரணமாக இருக்கலாம். சிற்றூர்கள் என்ற நிலையிலிருந்து நகரங்கள் என்ற வளர்ச்சிநிலை வரை சிலை வணக்கம் என்பதையே அறியாதவர்கள்தாம் மக்காவிலும் ம‌தீனாவிலும் வாழ்ந்திருந்தனர். பாகன்களால் அறிமுகப் படுத்தப்பட்ட ‘சிலைக் கலாச்சாரம்’ என்பது மக்கா‍ மதீனாவில் திணிக்கப் பட்டதும் பின்னர் அகற்றப் பட்டதுமாகும். திணிக்கப்பட்ட ஒன்றை, பாரம்பரிய கலாச்சாரம் என்பது வரலாற்றுப் புரட்டல்லவா? அது அழிந்ததாகக் கவலைப்படுவது முரண்பாடாகத் தெரியவில்லையா?

மலர்மன்னன் அவர்களே! உங்கள் வாதப்படியே “அரேபியரின் பாரம்பரிய தெய்வ நம்பிக்கைகளையும்” மீறி, நீங்கள் ”முகம்மதியம்’ என்று வேண்டுமென்றே தவறாகக் குறிப்பிடும் இஸ்லாம், உலகம் முழுதும் செல்வாக்குப் பெற என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள்! அரேபியாவில் மட்டும்தானே முகம்மது நபி வாழ்ந்தார். அதையும் தாண்டி இந்தியாவிலும், சீனாவிலும் இன்ன பிற நாடுகளிலும் இஸ்லாம் காலூன்ற ‘எந்த ஆதிக்கம்’ காரணமாக இருந்தது என்றும் சொல்வீர்களா?

இந்து மதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமுடையது என்று போலியாகச் சொல்லித் திரியும் நீங்கள், இந்து மதத்தின் பெயரால் நடக்கும் மூடப்பழக்கங்களைச் சாடி, மாற்றங்களை வலியுறுத்திய பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் உருவச்சிலையை, அரங்கநாதர் ஆலயத்தின் வாயிலில் வைத்ததால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று கூக்குரல் இட்டீர்களே! அதேபோல், ஆதம் நபி தொடங்கி, இப்றாஹிம் நபி வழியாக சிலைகளற்ற இறையில்லமாக இருந்து வந்த கஅபாவின் உள்ளே இருந்த இடைக்காலச் சிலைகளை அகற்றியதற்கும் இதே ‘புனிதக்’ காரணம்தான் இருந்தது என்பதை அறிவீர்களா வரலாற்றுப் புரட்டுச் செய்ய முயலும் மலர்மன்னன் அவர்களே?

அடுத்து, அக்ரஹாரங்களை அழிந்த அமெரிக்க மோகம் மற்றும் தஞ்சை முஸ்லிம்கள் குறிவைக்கப்படும் பின்னணிக் காரணங்கள் பற்றியும் இனி வரும் பகுதியில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்…

ஆக்கம்: நல்லடியார்
நன்றி : சத்திய மார்க்கம்

காரைக்குடி, இஸ்லாம்

பிப்ரவரி 26, 2007

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (PART-1)

மலர்மன்னன் என்பவரின் “கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” தொடர் கட்டுரையை சிஃபி தமிழ்தளத்தில் படிக்க நேர்ந்ததும் அது குறித்து அத்தளத்தினருக்கு நான் எழுதிய மறுப்பு குறித்து அவர்கள் மவுனம் காத்து தங்கள் சார்பு நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டியது குறித்து முன்னுரையில் எழுதியிருந்தேன்.

முழுநேர இந்துத்துவா எழுத்தாளர்களை எல்லாம் விஞ்சும் விதமாக மலர்மன்னன் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசக் கருத்துக்களை அக்கட்டுரையில் எழுதியுள்ளார். வயிற்றுக்கு உணவின்றி எலிக்கறி திண்ணும் விவசாயிகளைப் பற்றியோ காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக இந்து அரசியல்வாதிகளைப் பற்றியோ கவலைப்படாமல், தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் மதச்சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் தலையிடுவதன் மூலம், அமைதியுடன் வாழும் தஞ்சை இந்து-முஸ்லிம்களிடையே மதமோதல்களுக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டதோ என்ற அச்சத்தை எழுப்புகிறது மலர்மன்னனின் சிஃபிக் கட்டுரை!

குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசபயங்கரவாதங்களுக்குப் பிறகும் ஓயாத சங்பரிவார நரமாமிச உண்ணிகள் தென்னிந்தியாவின் மங்களூர்-பெங்களூர் என தனது நச்சுக் கரங்களைப் பரப்பி, தற்போது தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட முஸ்லிம்களைக் குறி வைத்துள்ளார்கள். விஜயபாரதம் மற்றும் இணைய ஊடகங்கள் மூலம் பல நச்சுக் கருத்துக்களைப் பரப்பி, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரும் சதிக்கு அடித்தளம் இட்டுள்ளனர்.

எங்கெல்லாம் இயலுமோ அங்கெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைத்து, கலவரங்களை ‘உற்பத்தி’ செய்து, பின்னர் ‘இந்து ஒற்றுமை மாநாடு’ என்ற வன்முறைக் கூட்டத்தை நடத்தி, அதன்மூலம் அப்பகுதி முஸ்லிம்களை அச்சுறுத்தி வைப்பதே சங்பரிவாரங்களின் கடந்தகால வரலாறாக இருக்கிறது. சமீப நிகழ்வான பெங்களூர் கலவரமும் இந்தவகையில்தான் ஏற்பட்டு, மத்திய அரசின் சாதுர்யமான துரித நடவடிக்கைகளால் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக அனைத்து புள்ளி விபரங்களையும் திரட்டி, முன்னேற்பாடாக தாக்கப்பட வேண்டிய முஸ்லிம் வீடுகள், வணிக நிறுவனங்கள் பற்றிய ஸ்கெட்ச் போட்டு வைத்தே கலவரங்களில் இந்து பயங்கரவாதிகள் கச்சிதமாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.

மலர்மன்னன் அவர்களின் முஸ்லிம்களைப் பற்றிய வன்ம எழுத்துக்களை ஆழ்ந்து நோக்கினால், மதக்கலவரத்தை உண்டு பண்ணுவதற்கான சதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதை ஓரளவு யூகிக்க முடிகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்குமுன் பக்ரீத் அன்று மாடுகளை வெட்டக்கூட மனம் வராத அளவுக்கு நமது பாரம்பரிய மரபுகளைமதித்த தஞ்சை மாவட்டத் தமிழ் முகமதியக்
குடும்பங்கள் எங்கிருந்தோ ஒட்டகங்களை அதிக விலை கொடுத்து வரவழைத்துச் சட்டத்திற்குப்புறம்பாக வெட்டிக் கொண்டாடும் மனப்போக்கை இன்று மேற்கொண்டது ஏன்?

ஆண்டாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டு ஏழ்மை நிலையிலேயே இருந்த ஓட்டு வங்கி முஸ்லிம்கள், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பன்னெடுங்காலம் பின்தங்கியிருந்து,சமீப பத்துப் பதினைந்தாண்டுகளில் வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் திறந்து விடப்பட்ட பிறகே எஞ்சியதில் தகுதியான கடைநிலைப் பணிகளின் மூலம் கிடைத்த சம்பளத்தில் பொருளாதார ரீதியில் சற்று நிமிர்ந்துள்ளனர் .

பொங்கல், தீபாவளி போனஸ் போன்றவற்றை அந்தந்த நேரத்தில் கொடுத்து சந்தோஷப்படுத்தும் அரசுகள் பெருநாள் போனஸ் என்று முஸ்லிம்களின் பண்டிகைக் காலங்களில் கொடுத்து அவர்களும் பண்டிகையை கடனின்றி கொண்டாட ‘மதசார்பற்ற அரசுகள்’ வழி செய்வதில்லை. இந்நிலையிலேயே மதசார்பற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது .

பெரும்பாலும் குர்பானி கொடுப்பது போன்ற மார்க்கக் கடமைகளில், குர்பானி இறைச்சியைத் தருகின்ற நிலையில் மிகச் சிலரும் பெருநாள் உணவுக்கென பெறுகின்ற நிலையில் மிகப் பலருமாக முஸ்லிம்கள் இருந்து வந்துள்ளனர். குர்பானி பிராணிகளாக ஆடு, மாடு,ஒட்டகம் ஆகியவற்றில் எது வசதிப்படுகிறதோ அதைக் கொடுக்கலாம். ஆடாக இருப்பின் நபருக்கு ஒரு ஆடுவீதமும், மாடு, ஒட்டகம் இவற்றை ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் குர்பானி கொடுக்கலாம்.(வசதியுள்ள தனிநபர் முழு மாடோ அல்லது ஒட்டகமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ கூட கொடுக்கலாம்).

சந்தையில் குர்பானிக்குத் தகுதியான ஒரு ஆட்டின் விலை சுமார் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கிறது . மாட்டின் விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையிலும், ஒட்டகம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரையிலும் உள்ளது. தனியாக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதை விட ஏழுபேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ குர்பானி கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் மார்க்கக் கடமையை அதிகம் பேர் நிறைவேற்ற முடிவதோடு, பயன் பெறும் ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

சங்பரிவார வெறியர்கள் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளில் முடிந்த மட்டும் இடையூறு செய்தே வந்துள்ளனர். குர்பானிக்காக மாடுகளைக் கொண்டு செல்லும் போது இந்தப் போலி பசுநேசர்களின் இடையூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல .(வடமாநிலத்தில் மாட்டை உணவிற்காக அறுத்ததற்காக சில தலித்துக்களைக் கொன்றவர்களும் இதே போலி பசுநேசர்கள்தான்.) மாட்டிற்குப் பகரமாக நம் நாட்டின் வடமாநிலச் சந்தைகளில் கிடைக்கும் ஒட்டகத்தை விலைக்கு வாங்கி குர்பானி கொடுக்கிறார்கள் .

பசுவை தெய்வமாக வணங்கும் இந்துக்கள், ஒட்டகக் குர்பானியை ஊக்குவிக்க வேண்டியதே யதார்த்தம்.

உலகிலேயே ஒரே இந்து நாடான நேபாளத்தில் சர்வ சாதாரணமாக மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் விற்கிறார்கள். அதனை எதிர்த்து எந்தவொரு போலிப் பசுநேசரும் குரல் கொடுப்பதில்லை. அவர்களின் குறியெல்லாம், இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும், தலித்களும்தாம்.

“மாடுகளை முஸ்லிம்கள் மாடுகளைப் பலியிடுகிறார்கள்” என்ற கூப்பாட்டுக்காவது இந்து மதத்தின் ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் ‘கோமாதா’ என்ற மதநம்பிக்கை என்பதாகக் கொள்ளலாம். ஆனால், ஒட்டகத்தைப் பலியிட்டு பகிர்ந்து உண்பதால் வயிறு எரியும் மலர்மன்னன் என்ன காரணம் சொல்லப் போகிறார்? எக்காரணம் கொண்டும் நம்நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து விடக்கூடாது என்பதைத் தவிர வேறுகாரணம் இருக்க முடியாது; அவ்வாறு ஒற்றுமையாக இருந்து விட்டால் சங்பரிவாரங்கள் அரசியல் பிழைப்புக்கு எங்கு செல்வார்கள்? என்ற சுயநலக்காரணமன்றி பண்பாட்டுக் கலாச்சார காரணமல்ல என்பதும் தஞ்சை மண்ணில் இந்துவும் முஸ்லிமும் மாமன்-மச்சானாய் வாழ்ந்து வருவது இந்து வெறியர்களின் கண்ணில் உறுத்துகிறது என்பதும் தெளிவு!

அடுத்து, அக்ரகாரங்கள் அழிந்து புதுப்புது மஸ்ஜித்கள் உருவாகியுள்ளதால் எழுந்த கவலையைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

பகுதி- 2 இன்சா அல்லாஹ் விரைவில்

ஆக்கம்: நல்லடியார்

நன்றி : சத்தியமார்க்கம்

Create a free website or blog at WordPress.com.